தேவன் தனது உலகை ஆளுகிறார்
48
கர்த்தர் கூறுகிறார், “யாக்கோபின் குடும்பமே! என்னைக் கவனி!
உங்களை நீங்கள் ‘இஸ்ரவேல்’ என்று அழைக்கிறீர்கள்.
யூதாவின் குடும்பத்தில் இருந்து நீங்கள் வந்திருக்கிறீர்கள்.
வாக்குறுதிகள் கொடுக்க நீங்கள் கர்த்தருடைய நாமத்தைப் பயன்படுத்துகிறீர்கள்.
இஸ்ரவேலின் தேவனை நீங்கள் துதிக்கிறீர்கள்.
ஆனால் நீங்கள் இவற்றைச் செய்யும்போது உண்மையாகவும் நேர்மையாகவும் இல்லாமல் இருக்கிறீர்கள்.”
“ஆம் பரிசுத்தமான நகரத்தின் பிரஜைகள் அவர்கள்.
அவர்கள் இஸ்ரவேலின் தேவனைச் சார்ந்து இருக்கிறார்கள்.
அவரது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர்.
“முன்பே நான் நடக்கப் போவதை உங்களுக்குச் சொன்னேன்.
நான் உங்களுக்கு அவற்றைப் பற்றிச் சொன்னேன்.
பிறகு, திடீரென்று அவை நடக்கும்படிச் செய்தேன்.
நான் அதனைச் செய்தேன். ஏனென்றால், நீங்கள் பிடிவாதமுடையவர்கள் என்பது எனக்குத் தெரியும்.
நான் சொன்ன எதையும் நீங்கள் நம்ப மறுத்தீர்கள்.
நீங்கள் மிகவும் பிடிவாதம் உடையவர்கள்.
நீங்கள் வளையாத இரும்பைப் போலவும் உறுதியான வெண்கலம் போலவும் இருக்கிறீர்கள்.
எனவே, நீண்ட காலத்துக்கு முன்பே நான் என்ன நடக்குமென சொன்னேன்.
அவை நடப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே நான் அவற்றைப்பற்றி உங்களுக்குச் சொன்னேன். நான் இதைச் செய்தேன்.
எனவே நீ, ‘எங்கள் விக்கிரகங்கள் (தெய்வங்கள்) இந்த நடபடிகளை நடக்க செய்தன’ என்று சொல்ல முடியாது.
நான் இதைச் செய்தேன்.
எனவே நீ, ‘எங்கள் விக்கிரகங்கள், எங்கள் சிலைகளால் இது நிகழ்ந்தது’” என்று சொல்லமுடியாது.
தேவன் இஸ்ரவேலைச் சுத்தப்படுத்த தண்டிக்கிறார்
“என்ன நடந்தது என்று நீங்கள் பார்த்தீர்கள், கேட்டீர்கள்.
எனவே, நீங்கள் இந்தச் செய்தியை பிற ஜனங்களிடம் சொல்லவேண்டும்.
இப்போது, நான் இதுவரை நீங்கள் அறியாத புதிய செய்திகளைச் சொல்லுவேன்.
இவை நீண்டக் காலத்திற்கு முன் நடந்ததல்ல.
இவை இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறது.
இதற்கு முன்னால் நீங்கள் இதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கமாட்டீர்கள்.
எனவே, ‘நாங்கள் ஏற்கெனவே அறிவோம்’ என்று நீங்கள் சொல்லமுடியாது.
ஆனாலும் வருங்காலத்தில் என்ன நடக்குமென்று இப்பொழுது, நான் சொன்னாலும் நீங்கள் கேட்க மறுப்பீர்கள்.
நீங்கள் எதையும் கற்றுக்கொள்ளமாட்டீர்கள்.
நான் சொன்ன எதையும் நீ எப்பொழுதும் கேட்பதில்லை.
நீ எப்பொழுதும் எனக்கு எதிராக இருப்பாய் என்பதை நான் தொடக்க முதலே அறிவேன்.
நீ பிறந்த நாள் முதலாகவே எனக்கு எதிராகக் கலகம் செய்திருக்கிறாய்.
“ஆனால், நான் பொறுமையாக இருப்பேன்.
நான் இதனை எனக்காகச் செய்வேன்.
நான் கோபங்கொண்டு உன்னை அழிக்காததற்காக ஜனங்கள் என்னைப் போற்றுவார்கள்.
காத்திருந்ததற்காக நீ என்னைப் போற்றுவாய்.
10 “பார், நான் உன்னைச் சுத்தப்படுத்துவேன்.
ஜனங்கள் வெள்ளியைச் சுத்தப்படுத்த நெருப்பைப் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் நான் உனக்குத் துன்பங்களைத் தந்து உன்னைச் சுத்தப்படுத்துவேன்.
11 எனக்காகவே, எனக்காகவே நான் இதனைச் செய்வேன்.
நான் முக்கியமானவன் அல்ல என்று நீ என்னை நடத்த முடியாது.
எனது துதியையும், மகிமையையும் பொய்த் தெய்வங்கள் எடுத்துக்கொள்ள விடமாட்டேன்.
12 “யாக்கோபே, என்னைக் கவனி!
இஸ்ரவேலர்களே, நான் எனது ஜனங்களாக உங்களை அழைத்தேன்.
எனவே என்னைக் கவனியுங்கள்!
நானே தொடக்கம், நானே முடிவு!
13 நான் பூமியை எனது சொந்தக் கையால் செய்தேன்!
எனது வலது கை ஆகாயத்தைச் செய்தது!
நான் அவற்றை அழைத்தால்
என் முன்னால் அவை கூடி வரும்.
14 “நீங்கள் அனைவரும் இங்கே வாருங்கள்.
என்னைக் கவனியுங்கள்.
இவை நடக்குமென்று எந்தப் பொய்த் தெய்வங்களாவது கூறினார்களா?இல்லை!
கர்த்தர் தெரிந்துகொண்ட விசேஷ மனிதன் எதை விரும்புகிறானோ அதைப் பாபிலோனுக்கும் கல்தேயருக்கும் செய்வான்.”
15 கர்த்தர் சொல்கிறார், “நான் அவனை அழைப்பேன் என்று சொன்னேன்.
நான் அவனைக் கொண்டுவருவேன். நான் அவனை வெற்றியடையச் செய்வேன்.
16 இங்கே வா, என்னைக் கவனி!
பாபிலோன் ஒரு தேசமாக ஆரம்பமாகும்போது நான் அங்கிருந்தேன்.
தொடக்கத்திலேயிருந்து நான் தெளிவாகப் பேசினேன்.
எனவே, நான் என்ன சொன்னேன் என்று ஜனங்களால் அறியமுடியும்.”
பிறகு ஏசாயா சொன்னான், “இப்பொழுது, எனது கர்த்தராகிய ஆண்டவர் என்னையும் அவரது ஆவியையும் இவற்றை உங்களிடம் சொல்ல அனுப்பியிருக்கிறார். 17 கர்த்தரும், மீட்பருமாகிய, இஸ்ரவேலின் பரிசுத்தர் சொல்கிறார்,
“‘நானே உனது தேவனாகிய கர்த்தர், பயனுள்ளதைச் செய்ய நான் உனக்குக் கற்பிக்கிறேன்.
நீ போக வேண்டிய பாதையில் உன்னை நான் வழி நடத்துகிறேன்.
18 நீ எனக்குக் கீழ்ப்படிந்திருந்தால்,
சமாதானம் பாய்ந்து வரும் ஆற்றைப் போன்று உன்னிடம் வந்திருக்கும்.
மீண்டும் மீண்டும் நன்மை கடல்
அலைகள்போன்று, உன்னிடம் வந்திருக்கும்,
19 நீ எனக்குக் கீழ்ப்படிந்தால், உனக்கு நிறைய பிள்ளைகள் இருந்திருக்கும்.
அவர்கள் மணல் துகள்களைப் போன்று இருந்திருப்பார்கள்.
நீ எனக்குக் கீழ்ப்படிந்திருந்தால், நீ அழிக்கப்படாமல் இருந்திருப்பாய்.
என்னோடு நீ தொடர்ந்து இருந்திருப்பாய்.’
20 “எனது ஜனங்களே, பாபிலோனிலிருந்து புறப்படுங்கள்!
எனது ஜனங்களே, கல்தேயரை விட்டு ஓடுங்கள்!
ஜனங்களிடம் இந்தச் செய்தியை மகிழ்ச்சியோடு கூறுங்கள்!
பூமியிலுள்ள தொலை தூர இடங்களிலும் இந்தச் செய்தியைப் பரப்புங்கள்.
ஜனங்களிடம் சொல்லுங்கள்.
‘கர்த்தர் அவரது தாசனாகிய யாக்கோபை மீட்டார்!’
21 கர்த்தர் அவரது ஜனங்களை வனாந்திரத்தின் வழியாக நடத்திச் செல்கிறார்.
அவர்களுக்கு எப்பொழுதும் தாகமாய் இராது! ஏனென்றால், அவரது ஜனங்களுக்காக அவர் கன்மலையிலிருந்து தண்ணீரைப் பாயச்செய்வார்!
அவர் பாறைகளைப் பிளந்தார்! தண்ணீர் வெளியே பாய்ந்தது.”
22 ஆனால் கர்த்தர் கூறுகிறார்,
“கெட்ட ஜனங்களுக்கு சமாதானம் இல்லை!”