பாபிலோனுக்குத் தேவனுடைய செய்தி
47
“மண்ணிலே இறங்கி வந்து அங்கே உட்காரு!
கல்தேயரின் கன்னியே தரையில் உட்காரு!
இப்போது நீ ஆள்பவள் இல்லை!
இனிமேல் நீ மென்மையானவள் என்று உன்னை ஜனங்கள் நினைக்கமாட்டார்கள்.
இப்போது நீ கடினமாக வேலை செய்ய வேண்டும்.
எந்திரத்தை நீ எடுக்க வேண்டும்.
தானியங்களை அரைத்து மாவாக்கு.
உனது முக்காட்டை நீக்கிவிடு. உனது ஆடம்பர ஆடைகளை நீக்கி விடு.
உனது நாட்டை விட்டுச் சென்று விடு!
ஆண்கள் பார்க்கும்படி உன் ஆடையைத் தொடைவரை தூக்கு, ஆறுகளைக் கடந்து போ,
ஆண்கள் உனது உடலைப் பார்க்கட்டும்.
உடல் ஆசைக்கு உன்னைப் பயன்படுத்தட்டும்.
நீ செய்கிற கெட்டவற்றுக்கு உன்னை விலை கொடுக்கும்படி செய்வேன்.
எந்த மனிதனும் உனக்கு உதவி செய்ய வரமாட்டான்.
“எனது ஜனங்கள் சொல்கிறார்கள், ‘தேவன் நம்மைக் காப்பார்.
அவரது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர், இஸ்ரவேலின் பரிசுத்தர்’”
“எனவே, பாபிலோனே, அங்கே உட்காரு. அமைதலாக இரு.
கல்தேயரின் மகளே, இருளுக்குள் போ! ஏனென்றால், ‘இராஜ்யங்களின் இராணியாக இனி நீ இருக்கமாட்டாய்,’
“நான் எனது ஜனங்களின் மீது கோபத்தோடு இருக்கிறேன்.
அவர்கள் எனக்குச் சொந்தமானவர்கள்.
ஆனால் நான் கோபமாக இருந்தேன்.
எனவே அவர்களை முக்கியமற்றவர்களாக்கினேன்.
நான் அவர்களை உனக்குக் கொடுத்தேன்.
நீ அவர்களைத் தண்டித்துவிட்டாய்.
நீ அவர்களுக்கு இரக்கம் காட்டவில்லை.
வயதான ஜனங்களும் கடுமையாக வேலை செய்யும்படி நீ செய்தாய்.
‘நான் என்றென்றும் வாழ்கிறேன்.
நான் எப்பொழுதும் இராணியாகவே இருப்பேன்’ என்று நீ சொன்னாய்.
அந்த ஜனங்களுக்குச் செய்த கெட்டவற்றைக்கூடக் கவனிக்கவில்லை.
என்ன நிகழும் என்று நீ நினைக்கவில்லை.
எனவே, மெல்லிய இயல்புடைய பெண்ணே!
இப்போது என்னைக் கவனி!
நீ பாதுகாப்பை உணருகிறாய், ‘நான் மட்டுமே முக்கியமானவள். என்னைப் போன்று முக்கியமானவள் எவருமில்லை.
நான் எப்போதும் விதவை ஆவதில்லை நான் எப்போதும் பிள்ளைகளைக் கொண்டிருப்பேன்’ என்று நீ சொல்கிறாய்.
இந்த இரண்டும் திடீரென்று உனக்கு நிகழும். முதலில் நீ உனது பிள்ளைகளை இழப்பாய்.
பிறகு நீ உனது கணவனை இழப்பாய்.
ஆம் இவை உனக்கு உண்மையில் நிகழும்.
உனது அனைத்து மந்திரங்களும் தந்திரங்களும் உன்னைக் காப்பாற்றாது.
10 நீ கெட்டவற்றைச் செய்கிறாய். ஆனாலும் நீ பாதுகாப்பாயிருப்பதாக நினைக்கிறாய்.
நீ உனக்குள், ‘நான் செய்கிற தவறுகளை எவரும் பார்ப்பதில்லை’ என நினைக்கிறாய்.
உனது ஞானமும், அறிவும் உன்னைக் காப்பாற்றும் என்று எண்ணுகிறாய்.
‘நான் ஒருத்தி மட்டுமே, என்னைப்போன்று முக்கியமானவள் எவளுமில்லை’ என்று நீ உனக்குள் நினைக்கிறாய்.
11 “ஆனால், உனக்குத் துன்பங்கள் வரும்.
அவை எப்போது வரும் என்று உனக்குத் தெரியாது.
ஆனால் அழிவு வந்துகொண்டிருக்கிறது.
நீ அந்தத் துன்பங்களைத் தடுத்திட எதுவும் செய்யமுடியாது!
என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளுமுன்னரே விரைவாக நீ அழிந்துபோவாய்.
12 உன் வாழ்வு முழுவதும் கடுமையாக உழைத்து தந்திரமும் மந்திரமும் கற்றாய்.
எனவே, உனது மந்திரத்தையும் தந்திரத்தையும் பயன்படுத்தத் தொடங்கு!
ஒருவேளை அந்தத் தந்திரங்கள் உனக்கு உதவும்.
ஒரு வேளை உன்னால் வேறு எவரையாவது பயங்காட்ட முடியும்.
13 உனக்கு ஏராளமான ஆலோசகர்கள் இருக்கிறார்கள்.
அவர்களது ஆலோசனைகளால் நீ சோர்வடைந்து விட்டாயா?
நட்சத்திரங்களை வாசிக்கிற உனது ஆட்களை வெளியே அனுப்பு.
எப்போது மாதம் தொடங்கும் என்று அவர்களால் சொல்ல முடியும்.
உனது துன்பங்கள் எப்போது வரும் என்றும் அவர்களால் உனக்குச் சொல்ல முடியும்.
14 ஆனால், அவர்களால் தங்களைக்கூடக் காப்பாற்றிக்கொள்ள முடியாது.
அவர்கள் பதரைப் போன்று எரிந்துபோவார்கள்.
அவர்கள் விரைவாக எரிந்துபோவார்கள். அப்பம் சுடுவதற்கான கனல்கூட மீதியாகாமல் எரிந்துபோகும்.
குளிர் காய்வதற்குக் கூட நெருப்பு இல்லாமல் போகும்.
15 இதுவரை நீ கடினப்பட்டு வேலை செய்துள்ள அனைத்துக்கும் இது ஏற்படும்.
உனது வாழ்க்கை முழுவதும் எவருடன் வியாபாரம் செய்தாயோ அவர்கள் உன்னை விட்டு விலகிப்போவார்கள்.
ஒவ்வொருவரும் அவரவர் வழி போவார்கள்.
உன்னைக் காப்பாற்ற எவரும் மீதியாக இருக்கமாட்டார்கள்.”