அவன் பேசுகிறான்
5
என் அன்பே! என் மணமகளே! நான் என் தோட்டத்திற்குள் நுழைந்தேன்.
நான் என் வெள்ளைப்போளங்களையும் கந்தவர்க்கங்களையும் சேகரித்தேன்.
நான் எனது தேனை தேன் கூட்டோடு தின்றேன்.
நான் எனது திராட்சைரசத்தையும், பாலையும் குடித்தேன்.
பெண்கள் அன்பர்களிடம் பேசுகிறார்கள்
அன்பர்களே! உண்ணுங்கள், குடியுங்கள் அன்பின்
போதை நிறைந்தவர்களாய் இருங்கள்.
அவள் பேசுகிறாள்
நான் தூங்குகிறேன்
ஆனால் என் இதயம் விழித்திருக்கிறது.
என் நேசர் தட்டுவதை நான் கேட்கிறேன்.
“எனக்காகத் திற என் இனியவளே என் அன்பே என் புறாவே,
என் மாசற்ற அழகியே!
என் தலை பனியால் நனைந்துவிட்டது.
என் தலைமயிர் இரவின் தூறலால் நனைந்துபோனது.”
“நான் என் ஆடையைக் கழற்றிப்போட்டேன்.
நான் அதனை மீண்டும் அணிந்துக்கொள்ள விரும்பவில்லை.
நான் என் பாதங்களைக் கழுவியிருக்கிறேன்.
அது மீண்டும் அழுக்காவதை நான் விரும்பவில்லை”
ஆனால் என் நேசர் தனது கையை கதவுத் துவாரத்தின்வழியாக நீட்டினார்.
நான் அவருக்காக வருத்தப்பட்டேன்.
என் நேசருக்காகக் கதவைத் திறக்க எழுந்தேன்.
என் கையிலிருந்து வெள்ளைப்போளமும் என் விரல்களிலிருந்து
வெள்ளைப்போளமும் வடிந்து கதவின் கைப்பிடிமீது வழிந்தது.
என் நேசருக்காகத் திறந்தேன்
ஆனால் அவர் திரும்பிப் போய்விட்டார், அவர் இல்லை.
அவர் வந்துபோனபோது
நான் ஏறக்குறைய மரித்தவள் போலானேன்.
நான் அவரைத் தேடினேன்
ஆனால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.
நான் அவரை அழைத்தேன்
ஆனால் அவர் எனக்குப் பதில் சொல்லவில்லை.
நகரக் காவலர்கள் என்னைப் பார்த்தார்கள்.
அவர்கள் என்னை அடித்துக் காயப்படுத்தினர்.
அந்தச் சுவரின்மேல் நின்ற காவலர்கள்
என் முக்காட்டை எடுத்துக்கொண்டனர்.
எருசலேமின் பெண்களே! நான் உங்களுக்குக் கூறுகிறேன் என் நேசரைக்
கண்டால், நான் நேசத்தால் மெலிந்துகொண்டிருக்கிறேன் எனக் கூறுங்கள்.
எருசலேமின் பெண்கள் அவளுக்குப் பதில் கூறுகிறார்கள்
அழகான பெண்ணே,
உன் அன்பர் மற்ற நேசர்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறார்?
உன் நேசர் மற்றவர்களைவிடச் சிறந்தவரா?
எனவேதான் நீ எங்களிடம் இந்த வாக்குறுதியைக் கேட்கிறாயா?
எருசலேம் பெண்களுக்கு அவள் பதில் கூறுகிறாள்
10 என் நேசர் சிவப்பானவர், வெண்மையானவர்.
பத்தாயிரம் பேரிலும் தனிச் சிறப்பானவர்.
11 அவரது தலை சுத்தமான தங்கத்தைப்போன்றிருக்கும்.
அவரது தலைமுடி சுருளுடையதாயிருக்கும்.
அது காகத்தைப்போன்று கறுப்பாயிருக்கும்.
12 அவரது கண்கள் நீரோடைகளின் அருகிலுள்ள புறாவின் கண்களைப் போலிருக்கும்.
பால் நிரம்பிய குளத்திலுள்ள புறாக்களைப் போலவும்,
பதிக்கப்பட்ட நகைபோலவும் இருக்கும்.
13 அவரது கன்னங்கள் மணம்மிகுந்த வாசனைப் பூக்கள் நிறைந்த தோட்டம் போலிருக்கும்.
அவரது உதடுகள் லீலி மலர்களைப்போல் இருக்கும்.
அதிலிருந்து வெள்ளைப்போளம் வடியும்.
14 அவரது கைகள் படிகப்பச்சை நகைகளால் அலங்கரிக்கப்பட்டது போலிருக்கும்.
அவரது உடல் மென்மையான தந்தம்.
இந்திர நீல இரத்தினங்கள் இழைத்ததுபோன்று இருக்கும்.
15 அவரது கால்கள் பளிங்குத் தூண்கள்
பொன் பீடத்தில் இருப்பதுபோல் இருக்கும்.
அவர் நின்றால்
லீபனோனில் நிற்கும் கேதுருமரம் போல் இருக்கும்.
16 ஆம், எருசலேமின் பெண்களே!
என் நேசர் மிகவும் விரும்பத்தக்கவர்.
அவரது வாய் இனிமையுள்ள அனைத்திலும் இனிமையானது.
இப்படிப்பட்டவரே என் நேசர்
இத்தகையவரே என் நேசர்.