அவள் பேசுகிறாள்
3
இரவில் என் படுக்கைமேல்
நான் நேசருக்காகக் காத்திருக்கிறேன்.
நான் அவருக்காக எதிர்பார்த்திருந்தேன்.
ஆனால் என்னால் அவரைக் கண்டு பிடிக்க இயலவில்லை.
இப்போது எழுந்திருந்து
நான் நகரைச் சுற்றி வருவேன்.
அங்குள்ள வீதிகளிலும் சந்துக்கங்களிலும்
என் நேசரைத் தேடுவேன்.
நான் அவருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
ஆனால் என்னால் அவரைக் காணமுடியவில்லை.
நகர காவலர்கள் என்னைக் கண்டார்கள்.
நான் அவர்களிடம், “எனது நேசரைக் கண்டீர்களா?” எனக்கேட்டேன்.
காவலர்கள் என்னைவிட்டுப் போனதும்,
நான் என் நேசரைக் கண்டுபிடித்தேன்.
அவரைப் பற்றிக் கொண்டேன்.
என் தாய் வீட்டில் என்னைப் பெற்றெடுத்த, என் தாயின் அறைக்கு அவரை நான் அழைத்துச் செல்லும்வரை நான் அவரைப் போகவிடவில்லை.
அவள் பெண்களோடு பேசுகிறாள்
எருசலேமின் பெண்களே, நான் தயாராகும்வரை,
என் அன்பை விழிக்கச் செய்து எழுப்பாமலிருக்க மான்களின் மீதும் மான்குட்டிகளின் மீதும் வாக்குறுதி கொடுங்கள்.
அவனும் அவனது மணப்பெண்ணும்
பெரும் ஜனங்கள் கூட்டத்தோடு
வனாந்தரத்திலிருந்து வருகின்ற அந்தப் பெண் யார்?
மேகங்களின் கூட்டத்தைப்போல வெள்ளைப் போளத்திலும்,
சாம்பிராணியிலும், சகல நறுமணத்திலும்,
வரும் புகைபோல அவர்களுக்குப் பின்னால் புழுதி எழும்புகிறது.
பார், சாலொமோனின் இந்தப் பல்லக்கு இஸ்ரவேலின் பலம்வாய்ந்த
60 வீரர்கள் அதனைச் சுற்றிப் பாதுகாத்து நிற்கிறார்கள்.
அவர்கள் அனைவரும் போர்ப் பயிற்சி பெற்றவர்கள்.
அவர்களின் இடுப்பில் வாள்கள் உள்ளன.
இரவில் எந்த ஆபத்துக்கும் தயாராக உள்ளனர்.
சாலொமோன் அரசன் தனக்காக ஒரு பல்லக்கு செய்திருக்கிறான்.
அதற்கான மரம் லீபனோனில் இருந்து கொண்டுவரப்பட்டது.
10 அதன் தூண்கள் வெள்ளியால் ஆனது.
அதன் இருக்கை நீலங்கலந்த சிவப்பு நிறமான துணியால் மூடப்பட்டிருந்தது.
எருசலேமின் பெண்கள் அதன் உட்பகுதியை மிகப் பிரியத்தோடு அன்பால் அலங்கரித்திருக்கிறார்கள்.
11 சீயோனின் பெண்களே! வெளியே வாருங்கள்.
சாலொமோன் அரசனைப் பாருங்கள்.
திருமண நாளில் அவனது தலைமேல் அவன் தாய் அணிவித்த கிரீடத்தை பாருங்கள்.
அந்த நாளில் அவன் மிகுந்த சந்தோஷமாய் இருந்தான்.