ஆயிரம் ஆண்டுகள்
20
பரலோகத்தில் இருந்து ஒரு தூதன் கீழே இறங்கி வருவதைக் கண்டேன். அவனிடம் பாதாள உலகத்தின் திறவு கோல் இருந்தது. அவன் தன் கையில் ஒரு நீண்ட சங்கிலியையும் வைத்திருந்தான். சாத்தான் எனப்படும் பழைய பாம்பாகிய ராட்சசப் பாம்பை அவன் பிடித்தான். அவன் அப்பாம்பை ஆயிரம் ஆண்டு காலத்துக்குச் சங்கிலியால் கட்டிப்போட்டான். அவன் அப்பாம்பைப் பாதாளத்திற்குள் எறிந்து மூடினான். ஆயிரம் ஆண்டுகள் முடியும் வரை பூமியின் மக்களை அது வஞ்சிக்காதபடிக்குப் பூட்டி முத்திரையிட்டான். அதன் பிறகு கொஞ்சக் காலத்துக்குப் பாம்பினை விடுதலை செய்யவேண்டும்.
சாத்தானின் தோல்வி
பிறகு நான் சில சிம்மாசனங்களைப் பார்த்தேன். அவற்றின்மேல் சிலர் அமர்ந்திருந்தனர். நியாயந்தீர்க்கிற அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்த மக்கள் இவர்களே ஆவார்கள். அப்போது இயேசுவைப் பற்றிய சாட்சிக்காகவும் தேவனுடைய செய்திக்காகவும் தலைவெட்டப்பட்டவர்களின் ஆன்மாக்களைக் கண்டேன். அவர்கள் அம்மிருகத்தையோ அல்லது அதனுடைய உருவத்தையோ வழிபடவில்லை. அவர்கள் அம்மிருகத்தின் அடையாளக் குறியை தம் முன் நெற்றியிலோ கைகளிலோ பெற்றிருக்கவில்லை. அவர்கள் மீண்டும் உயிர்த்தெழுந்து கிறிஸ்துவோடு ஆயிரம் வருஷங்கள் அரசாண்டார்கள். (மற்ற இறந்த மக்கள் 1,000 ஆண்டுகள் முடியும் மட்டும் உயிரடையவில்லை.)
இதுவே முதலாம் உயிர்த்தெழுதல் ஆகும். இந்த முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கு பெற்றவர்களே ஆசீர்வதிக்கப்பட்டவர்களும், பரிசுத்தமானவர்களும் ஆவார்கள். அவர்கள் மீது இரண்டாம் மரணத்துக்கு அதிகாரம் இல்லை. அவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் ஆசாரியராய் இருப்பார்கள். அவர்கள் இயேசுவோடு கூட ஆயிரம் ஆண்டுக் காலம் ஆட்சி செய்வார்கள்.
சாத்தான் முறியடிக்கப்படுதல்
ஆயிரம் ஆண்டுக் காலம் முடிந்த பிறகு, சிறையிலிருந்து சாத்தான் விடுதலை செய்யப்படுவான். உலகின் அனைத்து பாகங்களிலும் உள்ள தேசங்களில் இருக்கிற கோகையும் மகோகையும் வஞ்சிக்கச் செல்வான். போர் செய்வதற்காக மக்களை ஒன்று திரட்டுவான். ஏராளமான மக்கள் கடற்கரையில் உள்ள மணலைப் போன்று எண்ணிக்கையில் கூடுவர்.
சாத்தானின் படை எங்கும் பரந்தது. பூமியெங்கும் பரந்து தேவனுடைய மக்களுடைய முகாமையும் தேவன் நேசிக்கிற நகரையும் வளைந்துகொண்டது. ஆனால் பரலோகத்தில் இருந்து நெருப்பு கீழே வந்து சாத்தானின் படையை அழித்துவிட்டது. 10 மக்களைத் தந்திரத்தால் ஏமாற்றி வந்த சாத்தான், கந்தகம் எரியும் நெருப்புக் கடலுக்குள் வீசப்பட்டான். அவனோடு, அந்த மிருகமும், போலித் தீர்க்கதரிசியும் வீசப்பட்டனர். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வதைக்கப்படுவார்கள்.
வெள்ளை சிம்மாசனம்
11 பிறகு, ஒரு பெரிய வெள்ளை சிம்மாசனத்தையும் அதன் மேல் வீற்றிருக்கிறவரையும் நான் கண்டேன். அவர் பார்வையிலிருந்து வானமும், பூமியும் விலகி மறைந்தன. 12 மேலும் இறந்துபோன பெரியவர்களும், சிறியவர்களும் சிம்மாசனத்தின் முன்னே நிற்பதைக் கண்டேன். ஜீவப்புத்தகம் திறக்கப்பட்டது. வேறு சில புத்தகங்களும் திறக்கப்பட்டன. இறந்து போனவர்கள் அவர்களது செயல்களால் நியாயம் தீர்க்கப்பட்டனர். இவை எல்லாம் அந்தப் புத்தகங்களில் எழுதப்பட்டிருக்கின்றன.
13 கடல் தன்னுள் இறந்து போனவர்களை ஒப்படைத்தது. மரணமும், பாதாளமும் தங்களிடமிருந்த இறந்தவர்களை ஒப்படைத்தன. ஒவ்வொரு மனிதனும் தான் செய்த நற்செயல்களைப் பொறுத்து நியாயம் தீர்க்கப்பட்டான். 14 அப்போது மரணமும் பாதாளமும் நெருப்புக் கடலில் தள்ளப்பட்டன. இந்த நெருப்புக் கடலே இரண்டாம் மரணமாகும். 15 ஜீவப் புத்தகத்தில் எழுதப்பட்டவனாகக் காணப்படாதவன் எவனோ, அவன் நெருப்புக் கடலிலே தள்ளப்பட்டான்.