அரசு அதிகாரத்திற்கு அடிபணியவும்
13
நீங்கள் அனைவரும் ஆட்சியாளர்களுக்கு அடிபணிய வேண்டும். ஆட்சி செய்யும் ஒவ்வொருவருக்கும் ஆட்சி புரியும் அதிகாரத்தை தேவன் கொடுத்திருக்கிறார். இப்பொழுது அதிகாரம் செய்கின்றவர்களுக்கு தேவனாலேயே அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே அரசு அதிகாரத்திற்கு எதிராக இருப்பவன் உண்மையில் தேவனுடைய கட்டளைக்கு எதிராக இருக்கிறான் என்றே பொருளாகும். அரசுக்கு எதிராகச் செயல்படுபவன் உண்மையில் தண்டிக்கப்படத்தக்கவன். நன்மை செய்கிறவர்கள் ஆள்வோர்களிடம் அச்சப்படவேண்டிய தேவையில்லை. ஆனால் தீமை செய்கிறவர்கள் ஆள்வோர்களிடம் அச்சப்படவேண்டும். நீங்கள் ஆள்வோர்களைக் கண்டு அச்சம்கொள்வதில் இருந்து விடுதலை பெறவேண்டுமா? அப்படியானால் நன்மையை மட்டும் செய்யுங்கள். நீங்கள் நன்மையைச் செய்தால் அவர்கள் உங்களைப் பாராட்டுவார்கள்.
ஒரு ஆள்வோன் என்பவன் உங்களுக்கு உதவி செய்வதற்காக தேவனால் நியமிக்கப்பட்டவன். ஆனால் நீங்கள் தப்பு செய்தால் அஞ்சவேண்டும். உங்களைத் தண்டிக்கிற அதிகாரம் அவர்களுக்குண்டு. அதை அவர்கள் பயன்படுத்துவார்கள். தேவனுடைய பணியாளாகவே அவர்கள் தண்டனை வழங்குவார்கள். எனவே நீங்கள் அரசாங்கத்திற்கு அடிபணியுங்கள். நீங்கள் பணியாவிட்டால் தண்டிக்கப்படுவீர்கள். நீங்கள் செய்யத்தக்க நல்ல காரியமே அரசுக்குப் பணிவதுதான்.
இதற்காகத்தான் நீங்கள் வரிகளைச் செலுத்துகிறீர்கள். அவர்கள் தேவனுக்காகவும் உங்களுக்காகவும் உழைத்து வருகிறார்கள். தம் நேரமனைத்தையும் ஆட்சி செலுத்துவதிலேயே செலவழிக்கிறார்கள். அனைவருக்கும் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யுங்கள். கொடுக்க வேண்டிய வரிகளையும் கொடுத்துவிடுங்கள். மரியாதை செலுத்த வேண்டியவர்களுக்கு மரியாதை செலுத்துங்கள். எவருக்கு பயப்பட வேண்டுமோ அவர்களுக்கு பயப்படுங்கள்.
பிறரை நேசிப்பதே பிரமாணம்
எதற்காகவும் மற்றவர்களிடம் கடன் படாதிருங்கள். அன்புக்கு மட்டும் கடன்படுங்கள். மற்றவர்களிடம் அன்பு செலுத்துகிற ஒருவன் உண்மையில் சட்டமுழுவதிற்கும் அடிபணிந்தவனாய் இருப்பான். இவற்றையெல்லாம் நான் எதற்காகக் கூறுகிறேன் என்றால் “விபசாரம் செய்யாதிருங்கள். கொலை செய்யாதிருங்கள். களவு செய்யாதிருங்கள். அடுத்தவர்க்கு உரிய பொருட்களை விரும்ப வேண்டாம்.” சட்டவிதி இவற்றைச் சொல்கிறது. இவை எல்லா கட்டளைகளும், “தன்னை தானே நேசித்துக்கொள்வது போலவே ஒருவன் அடுத்தவனையும் நேசிக்க வேண்டும்” என்று ஒரு விதியையே சொல்கின்றன. 10 அன்பானது மற்றவர்களுக்குத் தவறு செய்யாதது. எனவே, அன்பு சட்டவிதியின் நிறைவேறுதலாய் இருக்கிறது.
11 நாம் மிக முக்கியமான காலத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதால் இவற்றைக் கூறுகிறேன். நீங்கள் தூக்கத்திலிருந்து எழ வேண்டிய நேரம் இதுதான். நாம் முதலில் நம்பியதைக் காட்டிலும் இரட்சிப்பின் காலம் நெருங்கிவிட்டது. 12 “இரவு” ஏறக்குறைய முடிந்து போனது. “பகல்” அநேகமாக முளைக்கத் தொடங்கி விட்டது. எனவே இருட்டுக்குச் சொந்தமான செயல்களை விட்டுவிடுவோம். வெளிச்சத்தின் ஆயுதங்களை அணிந்துகொள்வோம். 13 பகலுக்குரியவர்கள் செய்யத்தக்க செயல்களைச் சீராய் நாம் செய்வோம். களியாட்டமும், குடிவெறியும், வேசித்தனமும், காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாக நாம் இருக்கக் கூடாது. 14 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே ஆடையாக அணிந்துகொள்ளுங்கள். உங்கள் பாவ ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்வது பற்றியும் தீய காரியங்களை செய்வது பற்றியும் யோசிக்காதீர்கள்.

✡ 13:9: யாத். 20:13-15-17-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
✡ 13:9: லேவி. 19:18-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.