யோசபாத் போரை எதிர் நோக்கியிருக்கிறான்
20
பிறகு மோவாபிய ஜனங்களும், அம்மோன் ஜனங்களும், சில மியூனிய ஜனங்களும் யோசபாத்துக்கு எதிராகப் போரிடத் தொடங்கினார்கள். சிலர் யோசபாத்திடம் வந்து, “உங்களுக்கு எதிராகப் போரிட ஏதோமிலிருந்து ஒரு பெரும்படை வந்துகொண்டிருக்கிறது. அவர்கள் மரணக் கடலின் மறுகரையில் இருந்து வருகிறார்கள். அவர்கள் ஏற்கெனவே ஆசாசோன் தாமாரில் உள்ளார்கள்!” என்றனர். (ஆசாசோன் தாமார் எங்கேதி என்றும் அழைக்கப்படுகிறது.) யோசபாத்துக்குப் பயம் ஏற்பட்டது. என்ன செய்யவேண்டும் என்று கர்த்தரிடம் கேட்கத் தீர்மானித்தான். யூதாவிலுள்ள எல்லோரும் உபவாசம் இருக்க ஒரு நேரத்தைக் குறித்தான். யூதாவிலுள்ள ஜனங்கள் ஒன்று கூடி கர்த்தரிடம் உதவி கேட்டனர். யூதாவின் அனைத்து நகரங்களிலிருந்தும் ஜனங்கள் வந்து கர்த்தருடைய உதவியை வேண்டினார்கள். யோசபாத் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்தான். அங்கு புதுப்பிரகாரத்திற்கு முன்னால் இருந்தான். யூதாவிலிருந்தும் எருசலேமிலிருந்தும் வந்த ஜனங்கள் கூட்டத்தின் முன்னர் நின்று பேசினான். அவன் சொன்னதாவது:
“எங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே நீர் பரலோகத்திலிருக்கிற தேவன். அனைத்து நாடுகளிலும் உள்ள அரசுகளை நீர் ஆண்டுவருகிறீர். உமக்கு அதிகாரமும் பலமும் உள்ளது. உமக்கு எதிராக எவராலும் நிற்க முடியாது. நீரே எங்களுடைய தேவன். இந்த நிலத்திலிருந்து ஜனங்கள் வெளியேறுமாறு நீர் கட்டாயப்படுத்தினீர். இதனை உம்முடைய இஸ்ரவேல் ஜனங்களின் முன்னிலையிலேயே நீர் செய்தீர். நீர் இந்த நிலத்தை ஆபிரகாமின் சந்ததியினருக்கு எக்காலத்திற்கும் உரியதாக்கினீர். ஆபிரகாம் உமது நண்பர். ஆபிரகாமின் சந்ததியினர் இந்த நிலத்தில் வாழ்ந்தார்கள். உமது நாமத்தால் ஒரு ஆலயத்தைக் கட்டினார்கள். அவர்கள், ‘எங்களுக்கு வாளாலோ, தண்டனையாலோ, நோயாலோ, பஞ்சத்தாலோ துன்பங்கள் வந்தால் நாங்கள் உமது ஆலயத்தின் முன்னால் உமக்கு முன் நிற்போம். உம்முடைய நாமம் இவ்வாலயத்தின் மேல் உள்ளது. நாங்கள் துன்பத்தில் இருக்கும்போது உம்மை நோக்கிச் சத்தமிடுவோம். பின் நீர் அதைக் கேட்டு எங்களைக் காப்பாற்றுவீர்.’
10 “ஆனால் இப்போது, இங்கே அம்மோன், மோவாப், சேயீர் மலை ஆகிய ஜனங்கள் இருக்கின்றனர். இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வெளியேறி வந்தபோது அவர்களது நிலத்தின் வழியாகச் செல்ல நீர் அனுமதிக்கவில்லை. எனவே இஸ்ரவேல் ஜனங்கள் இவர்களை விட்டு விலகி, அழிக்காமல் போனார்கள். 11 ஆனால் பாரும் நாங்கள் அவர்களை அழிக்காமல் விட்டதற்கு அவர்கள் எங்களுக்குத் தரும் வெகுமதியைப் பாரும். அவர்கள் உம்முடைய நாட்டை விட்டு வெளியேறுமாறு எங்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். இந்த நாட்டை நீர் எங்களுக்கு கொடுத்தீர். 12 எங்களுடைய தேவனே, அந்த ஜனங்களைத் தண்டியும். எங்களுக்கு எதிராக வந்திருக்கும் இப்பெரும் படையை எதிர்க்க எங்களிடம் பலம் இல்லை. என்ன செய்யவேண்டும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. அதனால் நாங்கள் உம்மிடம் உதவியை வேண்டுகிறோம்!” என்றான்.
13 யூதாவிலுள்ள அனைத்து ஜனங்களும் தங்களுடைய மனைவி, குழந்தைகள் மற்றும் பிள்ளைகளுடன் கர்த்தருக்கு முன்னால் நின்றார்கள். 14 பிறகு கர்த்தருடைய ஆவி யகாசியேல் என்பவன் மீது வந்தது. யகாசியேல் சகரியாவின் மகன். சகரியா பெனாயாவின் மகன். பெனாயா ஏயெலின் மகன். ஏயேல் மத்தனியாவின் மகன். யகாசியேல் ஒரு லேவியன். இவன் ஆசாபின் சந்ததியான். கூட்டத்தின் நடுவில் 15 யகாசியேல், “நான் சொல்வதைக் கேளுங்கள். யோசபாத் அரசனே, யூதா மற்றும் எருசலேமில் உள்ள ஜனங்களே, கர்த்தர் உங்களுக்கு இதனைக் கூறுகிறார்: ‘இப்பெரும் படையைக்கண்டு அஞ்சவோ, கவலைப்படவோ வேண்டாம். ஏனென்றால் இது உங்களுடைய போரல்ல. இது தேவனுடைய போர். 16 நாளை கீழே இறங்கிப்போய் அவர்களோடு சண்டையிடுங்கள். அவர்கள் சிஸ் என்ற மேட்டு வழியாக வருகிறார்கள். அவர்களை நீங்கள் யெருவேல் எனும் வனாந்தரத்திற்கு எதிரான பள்ளத்தாக்கின் முடிவில் சந்திப்பீர்கள். 17 இப்போரில் நீங்கள் சண்டையிடவே வேண்டாம். உங்கள் இடங்களில் உறுதியாக நில்லுங்கள். கர்த்தர் உங்களைக் காப்பாற்றுவதைக் காண்பீர்கள். யூதா நாட்டினரே! எருசலேமியர்களே! அஞ்சாதீர்கள். கவலைப்படாதீர்கள்! கர்த்தர் உங்களோடு இருக்கிறார். எனவே நாளை அவர்களுக்கு எதிராகச் செல்லுங்கள்’ என்றார்” என்று சொன்னான்.
18 யோசபாத் குனிந்து வணங்கினான். அவனது முகம் தரையைத் தொட்டது. யூதாவில் வாழும் ஜனங்களும் எருசலேமில் வாழும் ஜனங்களும் கர்த்தருக்கு முன்பாக தரையில் விழுந்து வணங்கினார்கள். அவர்கள் அனைவரும் கர்த்தரை தொழுதுகொண்டனர். 19 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை, கோகாத் மற்றம் கேரா ஆகிய கோத்திரத்தில் உள்ள லேவியர்கள் எழுந்து நின்று துதித்தனர். அவர்கள் கர்த்தரை மிகச் சத்தமாகத் துதித்தனர்.
20 அதிகாலையில் யோசபாத்தின் படையானது தெக்கோவா வனாந்தரத்திற்குப் போனது. அவர்கள் புறப்படும்போது யோசபாத் நின்ற வண்ணம், “யூதா மற்றும் எருசலேமில் உள்ள ஜனங்களே! நான் சொல்வதைக் கேளுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள். விசுவாசத்தில் உறுதியாயிருங்கள். கர்த்தருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள். அதனால் வெற்றி பெறுவீர்கள்” என்றான்.
21 பிறகு யோசபாத் ஜனங்களை அறிவுரைகளால் உற்சாகப்படுத்தினான். பின்னர் கர்த்தரைத் துதித்துப் பாடப் பாடகர்களைத் தேர்ந்தெடுத்தான். கர்த்தர் பரிசுத்தமும், அற்புதமும் கொண்டவர். இவரைத் துதித்துப் பாடிக் கொண்டே பாடகர்கள் படைக்கு முன்னால் சென்றார்கள். அவர்கள்,
“கர்த்தரைத் துதியுங்கள்,
ஏனென்றால் அவரது அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்!” என்று பாடினார்கள்.
22 தேவனை இவர்கள் பாடித் துதிக்கத் தொடங்கியதும், கர்த்தர் அம்மோனியர், மோவாபியர், சேயீர் மலைநாட்டினர் ஆகியோர் மீது ஒரு மறைமுகத் தாக்குதல் நடத்தினார். இவர்களே யூதா நகரின் மேல் போர் தொடுத்து வந்தவர்கள். அவர்கள் அடிக்கப்பட்டார்கள். 23 அம்மோனியர்களும், மோவாபியர்களும் சேர்ந்து சேயீர் மலை நாட்டினர் மீது போரிடத் தொடங்கினார்கள். அம்மோனியர்களும், மோவாபியர்களும் சேயீர் மலை நாட்டினரைக் கொன்று அழித்தார்கள். சேயீர் மலை நாட்டினரைக் கொன்று முடித்த பிறகு தமக்குள்ளாகவே போரிட்டுக் கொல்லத் தொடங்கினார்கள்.
24 யூதா ஜனங்கள் வனாந்தரத்தில் பார்ப்பதற்கு வசதியான ஒரு இடத்திற்கு வந்தனர். அங்கிருந்து அவர்கள் பெரும் படையைக் கவனித்தனர். அவர்கள் செத்துப்போன பிணங்களைத்தான் பார்க்க முடிந்தது. எவரும் அங்கு உயிரோடு இல்லை. 25 யோசபாத்தும் அவனது படையும் வந்து மரித்துப் போனவர்களிடம் இருந்த விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச்சென்றார்கள். அவர்கள் பல மிருகங்களையும், செல்வங்களையும், ஆடைகளையும் விலையுயர்ந்த பொருட்களையும் கைப்பற்றினார்கள். அவர்கள் அவற்றைத் தமக்கு எடுத்துக்கொண்டனர். அவர்கள் இவ்வாறு விலையுயர்ந்த பொருட்களை மூன்று நாட்களாக கொள்ளையிட்டனர். ஏனென்றால் அவற்றின் அளவு அவ்வளவு மிகுதியாயிருந்தது. 26 நான்காவது நாள் யோசபாத்தும் அவனது படைகளும் பெராக்கா பள்ளத்தாக்கில் கூடினார்கள். அந்த இடத்தில் அவர்கள் கர்த்தரைத் துதித்தனர். எனவே அந்த இடம் “பெராக்கா பள்ளத்தாக்கு” என்று இதுவரையிலும் அழைக்கப்படுகிறது.
27 பிறகு யோசபாத் யூதா மற்றும் எருசலேம் ஜனங்களை எருசலேமிற்குத் திரும்ப அழைத்துக் கொண்டு போனான். அவர்களின் பகைவர்கள் அழிக்கப்பட்டதால் அவர்களைக் கர்த்தர் மிகவும் மகிழ்ச்சியோடு வைத்தார். 28 அவர்கள் எருசலேமிற்குத் தம்புருக்களோடும், சுரமண்டலங்களோடும், எக்காளங்களோடும் வந்து கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்றனர்.
29 அனைத்து நாடுகளிலும் உள்ள அனைத்து அரசுகளும் கர்த்தருக்கு அஞ்சினார்கள். ஏனென்றால் அவை இஸ்ரவேலின் எதிரிகளோடு கர்த்தர் போரிட்டதைப் பற்றி கேள்விப்பட்டனர். 30 அதனால் யோசபாத்தின் அரசாங்கம் சமாதானமாக இருந்தது. யோசபாத்தின் தேவன் அவனைச் சுற்றிலும் சமாதானத்தைத் தந்தார்.
யோசபாத் ஆட்சியின் முடிவு
31 யோசபாத் யூதா நாடு முழுவதையும் அரசாண்டான். இவன் ஆளத்தொடங்கும்போது இவனுக்கு வயது 35, இவன் எருசலேமில் 25 ஆண்டுகள் ஆண்டான். இவனது தாயின் பெயர் அசுபாள். இவள் சில்கியின் மகள். 32 யோசபாத் தனது தந்தை ஆசாவைப் போன்று சரியான வழியில் வாழ்ந்தான். அவன் ஆசாவின் வழியைப் பின்பற்றுவதில் இருந்து மாறவில்லை. கர்த்தருடைய பார்வையில் நல்லவற்றையேச் செய்தான். 33 ஆனால் மேடைகள் அகற்றப்படவில்லை. தம் முற்பிதாக்கள் பின்பற்றிய தேவனைப் பின்பற்றுவதற்காக ஜனங்கள் தங்களுடைய இருதயத்தைத் திருப்பவில்லை. 34 யோசபாத் செய்த மற்ற செயல்களைப் பற்றி தொடக்கம் முதல் இறுதிவரை உள்ளவற்றைப் பற்றி ஆனானியின் மகனாகிய யெகூவின் ஆவணங்களில் எழுதப்பட்டுள்ளன. பிரதி செய்யப்பட்டு, இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்னும் புத்தகத்தில் இவை சேர்க்கப்பட்டன.
35 பிறகு யூதாவின் அரசனான யோசபாத் இஸ்ரவேல் அரசனான அகசியாவோடு ஒரு ஒப்பந்தம் செய்துக்கொண்டான். அகசியா தீமைச் செய்தான். 36 யோசபாத் அகசியோவோடு சேர்ந்து கொண்டு தர்ஷீசுக்குச் செல்ல கப்பல் கட்டினான். அவர்கள் கப்பல்களை எசியோன் கேபேரிலே கட்டினார்கள். 37 பிறகு எலியேசர் யோசபாத்துக்கு எதிராகப் பேசினான். எலியேசரின் தந்தை பெயர் தொதொவா. எலியேசர் மரேசா ஊரினன். அவன், “யோசபாத், நீ அகசியாவோடு சேர்ந்துவிட்டாய். அதனால்தான் கர்த்தர் உனது வேலைகளை அழிப்பார்” என்றான். கப்பல்கள் நொறுங்கிப்போயின. அதனால் யோசபாத்தும், அகசியாவும் தம் ஆட்களை தர்ஷீசுக்கு அனுப்பமுடியாமல் போயிற்று.