இஸ்ரவேலரை எண்ணுவதினால் தாவீது பாவம் செய்கிறான்
21
இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராக சாத்தான் எழுந்தான். அவன் இஸ்ரவேல் ஜனங்களை எண்ணி கணக்கிட தாவீதை ஊக்கப்படுத்தினான். எனவே தாவீது யோவாப்பிடமும், ஜனங்கள் தலைவர்களிடமும், “போய் அனைத்து இஸ்ரவேலரின் எண்ணிக்கையையும் கணக்கிடு. நாட்டிலுள்ள ஒவ்வொருவரையும் பெயர்செபா முதல் தாண் வரையுள்ள அனைவரையும் கணக்கிடு. பிறகு எனக்குச் சொல். மொத்தத்தில் ஜனங்கள் தொகை எத்தனை என்று கணக்கிட்டு எனக்குச் சொல்” என்றான்.
ஆனால் யோவாப், “இப்போதுԔ இருக்கிற ஜனங்களைவிட நூறு மடங்காக கர்த்தர் செய்வார்! ஐயா, இஸ்ரவேலரின் அனைத்து ஜனங்களும் உங்கள் தொண்டர்கள். எனது அரசனும் ஆண்டவனும் ஆனவரே! இந்த செயலை ஏன் செய்ய விரும்புகிறீர்? நீங்கள் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் பாவம் செய்த உணர்வுக்கு உள்ளாக்குவீர்கள்!” என்று சொன்னான்.
ஆனால், தாவீது அரசனோ உறுதியாக இருந்தான். அரசன் சொன்னபடியே யோவாப் செய்தான். எனவே அவன் இஸ்ரவேலின் முழுவதற்கும் போய் கணக்கிட்டான். பிறகு அவன் எருசலேமிற்குத் திரும்பி வந்தான். அவன் தாவீதிடம் ஜனங்களின் எண்ணிக்கையைச் சொன்னான். இஸ்ரவேலில் 1,100,000 பேர் வாளைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள். யூதாவில் வாளைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் 4,70,000 பேர். யோவாப், லேவி மற்றும் பென்யமீன் கோத்திரங்களைக் கணக்கிடவில்லை. ஏனென்றால் அவன் தாவீது அரசனின் கட்டளையை விரும்பவில்லை. தேவனுடைய பார்வையில் தாவீது இந்த தீயச்செயலைச் செய்துவிட்டான். எனவே, தேவன் இஸ்ரவேலரைத் தண்டித்தார்.
தேவன் இஸ்ரவேலரைத் தண்டிக்கிறார்
பிறகு தாவீது தேவனிடம், “நான் முட்டாள்தனமான செயலைச் செய்துவிட்டேன். இஸ்ரவேல் ஜனங்களை எண்ணி ஒரு தீய பாவத்தைச் செய்துவிட்டேன். இப்போது உங்கள் தொண்டனாகிய எனது பாவத்தை என்னிடமிருந்து நீக்குமாறு கெஞ்சுகிறேன்” என்றான்.
9-10 காத் என்பவன் தாவீதின் தீர்க்கதரிசி ஆவான். கர்த்தர் காத்திடம், “போய் தாவீதிடம், ‘இதுதான் கர்த்தர் கூறியது: நான் உனக்குத் தேர்ந்தெடுக்க மூன்று காரியங்களைத் தருகிறேன். அவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு நீ தேர்ந்தெடுத்த முறையிலேயே உன்னைத் தண்டிப்பேன்’ என்று கூறு” என்றார்.
11-12 பிறகு காத் தாவீதிடம் சென்று, அவனிடம், “‘தாவீதே நீ விரும்புகிற தண்டனையைத் தேர்ந்தெடுத்துக்கொள்: மூன்று ஆண்டுகள் உணவில்லாமல் இருப்பது, அல்லது மூன்று மாதங்கள் உனது பகைவர்கள் தம் ஆயுதங்களால் துரத்த ஓடிக்கொண்டே இருப்பது, அல்லது மூன்று நாட்கள் கர்த்தர் தரும் தண்டனை. இதனால் பயங்கரமான நோய் நாடு முழுவதும் பரவும், கர்த்தருடைய தூதன் இஸ்ரவேல் முழுவதுமுள்ள ஜனங்களை அழிப்பான்’ என்று கர்த்தர் சொல்கிறார். தேவன் என்னை அனுப்பினார். இப்போது, நான் அவருக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று நீ முடிவு செய்” என்றான்.
13 தாவீது காத்திடம், “நான் இக்கட்டில் அகப்பட்டுக்கொண்டேன்! என்னை மனிதர்களின் கைகளில் அகப்பட்டுக்கொள்ளவிடாதே. மனிதர்கள் என் தண்டனையை முடிவுசெய்வதை நான் விரும்பவில்லை. கர்த்தர் இரக்கம் உள்ளவர், எனவே அவரே என் தண்டனையை முடிவுசெய்யட்டும்” என்றான்.
14 எனவே கர்த்தர் கொடிய நோயை இஸ்ரவேலரிடம் பரப்பினார். 70,000 பேர் மரித்தனர். 15 தேவன், எருசலேமை அழிக்க ஒரு தூதனை அனுப்பினார். ஆனால், அத்தூதன் எருசலேமை அழிக்கத் தொடங்கும்போது, கர்த்தர் அதனைப் பார்த்து வருத்தப்பட்டார். கர்த்தர் அத்தூதனிடம், “நிறுத்து! இதுபோதும்!” என்றார். கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய ஓர்னானின் களத்தருகில் நின்றான்.
16 கர்த்தருடைய தூதன் ஆகாயத்தில் நிற்பதைத் தாவீது கண்களை ஏறெடுத்துப் பார்த்தான். அத்தூதன் எருசலேம் நகரை நோக்கி தன் வாளை உருவிக்கொண்டு நின்றான். தாவீதும், மற்ற தலைவர்களும் தரையில் முகம்படும்படி குனிந்து வணங்கினார்கள். தாவீதும், தலைவர்களும் தங்கள் துக்கத்தை வெளிக்காட்ட சிறப்பான ஆடையை அணிந்திருந்தனர். 17 தாவீது தேவனிடம், “பாவம் செய்தவன் நான் ஒருவனே! ஜனங்களை எண்ணி கணக்கிடும்படி நானே கட்டளையிட்டேன்! நானே தவறு செய்தவன்! இஸ்ரவேல் ஜனங்கள் எந்தத் தவறையும் செய்யவில்லை! தேவனாகிய கர்த்தாவே, என்னையும் என் குடும்பத்தையும் தண்டியும்! உமது ஜனங்களை அழிக்கும் கொடிய நோயை நிறுத்தும்!” என்றான்.
18 பிறகு கர்த்தருடைய தூதன் காத்திடம் பேசினான். அவன், “தாவீதிடம் கர்த்தரை தொழுதுகொள்ள ஒரு பலிபீடம் கட்டுமாறு கூறு. தாவீது, அப்பலிபீடத்தை எபூசியனாகிய ஓர்னானின் களத்திலே கட்டவேண்டும்” என்றான். 19 காத் இவற்றை தாவீதிடம் கூற, தாவீது ஓர்னானின் களத்துக்குப் போனான்.
20 ஓர்னா கோதுமையை அடித்துக்கொண்டிருந்தான். அவன் திரும்பி தேவதூதனைப் பார்த்தான். ஓர்னானின் நான்கு மகன்களும் ஓடி ஒளிந்துக் கொண்டார்கள். 21 தாவீது ஓர்னாவிடம் சென்றான், ஓர்னா களத்தைவிட்டு வெளியே வந்தான். தாவீதின் அருகிலே போய் அவன் முன்பு தரைமட்டும் குனிந்து வணங்கினான்.
22 தாவீது ஓர்னாவிடம், “உனது களத்தை எனக்கு விற்றுவிடு நான் உனக்கு முழு விலையையும் தருவேன். பிறகு இந்த இடத்தை கர்த்தரை தொழுது கொள்வதற்கான பலிபீடத்தைக் கட்டப் பயன்படுத்துவேன். அதன் பிறகே இப்பயங்கர நோய் போகும்” என்றான்.
23 ஓர்னா தாவீதிடம், “களத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எனது அரசன், மற்றும் ஆண்டவன். உமது விருப்பப்படி செய்யும். நான் உங்களுக்கு தகனபலியிட மாடுகளும், விறகுகளும் தருவேன். தானியக் காணிக்கைக்காக, கோதுமையைத் தருவேன். நான் இவை அனைத்தையும் தருவேன்!” என்றான்.
24 ஆனால் தாவீது அரசன், “இல்லை, நான் உனக்கு முழு விலையையும் தருவேன். நான் உனக்குரிய எதையும் எடுத்து கர்த்தருக்கு கொடுக்கமாட்டேன். இலவசமாக எதையும் எடுத்து காணிக்கை செலுத்தமாட்டேன்” என ஓர்னாவிடம் கூறினான்.
25 எனவே தாவீது ஓர்னாவுக்கு 15 பவுண்டு தங்கத்தைக் கொடுத்தான். 26 தாவீது கர்த்தருக்கு அங்கே பலிபீடத்தைக் கட்டினான். தாவீது சர்வாங்க தகன பலியையும், சமாதானப் பலியையும் அளித்தான். தாவீது, கர்த்தரிடம் ஜெபம் செய்தான். வானிலிருந்து அக்கினியை வரவழைத்து, கர்த்தர் தாவீதிற்குப் பதில் சொன்னார். அந்த அக்கினி தகனபலிபீடத்தில் வந்து விழுந்தது. 27 பிறகு கர்த்தர் தூதனுக்கு அவனது வாளை உறையில் போடும்படி கட்டளையிட்டார்.
28 ஓர்னாவின் களத்தில் கர்த்தர் தனக்குப் பதில் சொன்னதை தாவீது கண்டான். எனவே, தாவீது கர்த்தருக்கு தானே பலிகளைச் செலுத்தினான். 29 தகன பலிபீடமும் பரிசுத்தக் கூடாரமும் மலைமீது கிபியோனில் இருந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் இருக்கும்போது மோசே இந்தப் பரிசுத்தக் கூடாரத்தை அமைத்தான். 30 தாவீது, பரிசுத்தக் கூடாரத்திற்குள் தேவனோடு பேச நுழையவில்லை. ஏனென்றால் அவனுக்கு அச்சம் ஏற்பட்டது. கர்த்தருடைய தூதனுக்கும் அவனது வாளுக்கும் தாவீது மிகவும் பயந்தான்.