23
“இது யூதா ஜனங்களின் மேய்ப்பர்களுக்கு (தலைவர்களுக்கு) மிகவும் கெட்டதாகும். அம்மேய்ப்பர்கள் ஆடுகளை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லா திசைகளிலும் என் மேய்ச்சல் நிலத்திலிருந்து ஆடுகளை ஓட வைக்கிறார்கள்” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.
எனது ஜனங்களுக்கு அம்மேய்ப்பர்களே பொறுப்பானவர்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அம்மேய்ப்பர்களுக்கு இதனைச் சொல்கிறார்: “மேய்ப்பர்களாகிய நீங்கள் எனது ஆடுகளை எல்லாத் திசைகளிலும் ஓடச்செய்கிறீர்கள். அவை போகுமாறு நீங்கள் பலவந்தப்படுத்துகிறீர்கள். நீங்கள் அவற்றைப்பற்றி அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், நான் உங்களைப்பற்றி அக்கறை எடுத்துக்கொள்வேன். நீங்கள் செய்த தீமைக்காக நான் உங்களைத் தண்டிப்பேன்.” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் எனது ஆடுகளை வேறு நாடுகளுக்கு அனுப்பினேன். ஆனால், விடுபட்ட ஆடுகளை நான் சேகரிப்பேன். நான் அவற்றை மீண்டும் அவற்றின் மேய்ச்சல் நிலத்திற்குக் கொண்டுவருவேன். எனது ஆடுகள் தம் மேய்ச்சல் நிலத்திற்குத் திரும்பியதும், அவற்றுக்கு நிறைய குட்டிகள் வர அவை எண்ணிக்கையில் பெருகும். நான் எனது ஆடுகளுக்குப் புதிய மேய்ப்பர்களை ஏற்படுத்துவேன். அம்மேய்ப்பர்கள் எனது ஆடுகளை அக்கறையோடு பார்த்துக்கொள்வார்கள். எனது ஆடுகள் பயப்படவோ, கலங்கவோ செய்யாது. எனது ஆடுகள் எதுவும் காணாமல் போகாது” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.
நீதியுள்ள “துளிர்”
இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது:
“காலம் வந்துக்கொண்டு இருக்கிறது.
நான் ஒரு நல்ல ‘துளிரை’ எழுப்புவேன்.
அவன் அரசன் ஆவான்.
அவன் ஞான வழியில் ஆள்வான்.
நாட்டில் எது சரியோ நியாயமானதோ, அதைச் செய்வான்.
நல்ல ‘துளிருள்ள’ காலத்தில், யூதாவின் ஜனங்கள் காப்பாற்றப்படுவார்கள்.
இஸ்ரவேலர்கள் பாதுகாப்பாக வாழ்வார்கள்.
இது அவரது நாமமாக இருக்கும்:
கர்த்தர் நமது நன்மை.
“எனவே, காலம் வந்துக்கொண்டிருக்கிறது” இச்செய்தி கர்த்தரிடமிருந்து வந்தது. “ஜனங்கள் பழைய வாக்குறுதியை எப்பொழுதும் சொல்லமாட்டார்கள். பழைய வாக்குறுதியானது: ‘கர்த்தர் உயிரோடு இருப்பது எவ்வளவு உறுதியானதோ அவ்வளவு உறுதியாக, கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டு வந்தவர்….’ ஆனால் ஜனங்கள் புதிதாகச் சொல்வார்கள்: ‘கர்த்தர் உயிரோடிருப்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மையாக, இஸ்ரவேல் ஜனங்களை வட நாட்டிலிருந்து கொண்டுவந்தார். ஏற்கனவே, அவர்களை அனுப்பிய அனைத்து நாடுகளிலிருந்தும் அழைத்துக்கொண்டுவந்தார்….’ பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் தம் சொந்த நாட்டில் வாழ்வார்கள்.”
கள்ள தீர்க்கதரிசிகளுக்கு எதிரான தீர்ப்பு
தீர்க்கதரிசிகளுக்கான ஒரு செய்தி:
நான் மிகவும் சோகமாக இருக்கிறேன்.
என் இருதயம் உடைந்திருக்கிறது.
எனது அனைத்து எலும்புகளும் அசைகின்றன.
நான் (எரேமியா) குடிக்காரன் போல் இருக்கிறேன்.
கர்த்தரினிமித்தமும் அவரது பரிசுத்த வார்த்தைகளினிமித்தமும்.
10 யூதா நாடு முழுவதும் வேசிதனம் என்னும் பாவம் செய்த ஜனங்களால் நிறைந்துள்ளது.
அவர்கள் பல வழிகளில் விசுவாசமற்றவர்களாக இருக்கிறார்கள்.
கர்த்தர் அந்த நாட்டை சபித்தார்.
அது மிகவும் வறண்டுபோயிற்று.
செடிகள் வாடி மேய்ச்சல் நிலங்கள் செத்துப்போயின.
வயல்கள் வனாந்தரங்களைப்போன்று ஆயின.
தீர்க்கதரிசிகள் எல்லாம் தீயவர்கள்.
அத்தீர்க்கதரிசிகள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி தவறான வழிகளில் அதிகாரத்தைச் செலுத்தினார்கள்.
11 “தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும் கூடத் தீயவர்கள் ஆனார்கள்.
அவர்கள் எனது சொந்த ஆலயத்தில் தீயவற்றைச் செய்வதைப் பார்த்திருக்கிறேன்”
இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.
12 “எனது செய்தியை அவர்களுக்கு கொடுப்பதை நான் நிறுத்துவேன்.
இது அவர்கள் இருட்டில் நடப்பதைப்போன்றது.
இது அந்தத் தீர்க்கதரிசிகளுக்கும் ஆசாரியர்களுக்கும் வழுக்குகின்ற சாலையைப்போன்றது.
அவர்கள் அந்த இருளில் விழுவார்கள்.
அவர்களுக்கு நான் துரதிர்ஷ்டம் கொண்டு வருவேன்.
நான் அந்தத் தீர்க்கதரிசிகளையும் ஆசாரியர்களையும் தண்டிப்பேன்”
இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.
13 “சமாரியா தீர்க்கதரிசிகள் தவறுகள் செய்வதை நான் பார்த்தேன்.
பொய்த் தெய்வமாகிய பாகாலின் பெயரால் அத்தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் சொல்வதைப் பார்த்தேன்.
அத்தீர்க்கதரிசிகள் இஸ்ரவேல் ஜனங்களை, கர்த்தரைவிட்டு வெளியே வழிநடத்திச் சென்றனர்.
14 இப்போது நான் யூதாவிலுள்ள தீர்க்கதரிசிகள்
எருசலேமில் பயங்கரமான செயல்கள் செய்வதைப் பார்க்கிறேன்.
இத்தீர்க்கதரிசிகள் வேசிதனம் என்னும் பாவத்தைச் செய்கின்றனர்.
அவர்கள் பொய்களைக் கேட்கின்றனர்.
அவர்கள் பொய்யான போதனைகளுக்கு அடிபணிகிறார்கள்.
அவர்கள் தீயவர்கள் தொடர்ந்து
தீயச் செயல்களைச் செய்ய ஊக்குவிக்கிறார்கள்.
எனவே, ஜனங்கள் பாவம் செய்வதை நிறுத்தவில்லை.
அவர்கள் சோதோமின் ஜனங்களைப்போன்று இருக்கிறார்கள்.
இப்போது எருசலேம் எனக்கு கொமோராபோன்று உள்ளது.”
15 எனவே, தீர்க்கதரிசிகளைப்பற்றி சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறது இதுதான்:
“நான் அத்தீர்க்கதரிசிகளை தண்டிப்பேன்.
தண்டனையானது விஷமுள்ள உணவை உண்பது போலவும், விஷத்தண்ணீரை குடிப்பதுபோன்றும் இருக்கும்.
தீர்க்கதரிசிகளுக்கு ஆன்மீக நோய் ஏற்பட்டது.
அந்நோய் நாடு முழுவதும் பரவியது.
எனவே, அத்தீர்க்கதரிசிகளை நான் தண்டிப்பேன்.
அந்நோய் எருசலேமிலிருக்கும் தீர்க்கதரிசிகளிடமிருந்து வந்தது.”
16 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்:
“உங்களில் அத்தீர்க்கதரிசிகள் சொல்பவற்றில் கவனம் செலுத்தாதீர்கள்.
அவர்கள் உங்களை முட்டாளாக்க முயல்கிறார்கள்.
அத்தீர்க்கதரிசிகள் தரிசனங்களைப்பற்றி பேசுகிறார்கள்.
ஆனால் அவர்கள் என்னிடமிருந்து அத்தரிசனங்களைப் பெறவில்லை.
அவர்களின் தரிசனங்கள் அவர்களது சொந்த மனதிலிருந்தே வருகின்றன.
17 கர்த்தரிடமிருந்து வந்த உண்மையான செய்தியைச் சிலர் வெறுக்கிறார்கள்.
எனவே, அத்தீர்க்கதரிசிகள் ஜனங்களுக்கு வேறுபட்டச் செய்தியைக் கூறுகிறார்கள்.
அவர்கள், ‘உங்களுக்கு சமாதானம் இருக்கும்’ என்று கூறுகிறார்கள்.
சில ஜனங்கள் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார்கள்.
அவர்கள் தாங்கள் செய்யவிரும்புவதை மட்டுமே செய்கிறார்கள்.
எனவே அத்தீர்க்கதரிசிகள், ‘உங்களுக்கு எந்தத் தீமையும் ஏற்படாது!’ என்று கூறுகிறார்கள்.
18 ஆனால் அத்தீர்க்கதரிசிகளில் எவரும் பரலோகச் சபையில் நின்றிருக்கமாட்டார்கள்.
அவர்களில் எவரும் கர்த்தருடைய செய்தியைப் பார்த்திருக்கவோ கேட்டிருக்கவோமாட்டார்கள்.
அவர்கள் எவரும் கர்த்தருடைய செய்தியை கூர்ந்து கவனமாகக் கேட்டிருக்கமாட்டார்கள்.
19 இப்பொழுது கர்த்தருடைய தண்டனை புயலைப் போன்று வரும்.
கர்த்தருடைய கோபம் கொடிய புயலைப்போன்றிருக்கும்.
கெட்ட மனிதர்களின் தலைகளை மோதித் தள்ளவரும்.
20 கர்த்தருடைய கோபம், அவர் என்ன செய்ய வேண்டும் என்று
திட்டமிட்டிருந்தாரோ அவற்றைச் செய்து முடிக்கும்வரை நிற்காது.
அந்த நாட்களின் முடிவில்
நீங்கள் தெளிவாக அறிந்துக்கொள்வீர்கள்.
21 அத்தீர்க்கதரிசிகளை நான் அனுப்பவில்லை.
ஆனால், அவர்கள் செய்தியைச் சொல்ல ஓடினார்கள்.
நான் அவர்களோடு பேசவில்லை.
ஆனால் அவர்கள் என் நாமத்தில் பிரசங்கம் செய்தனர்.
22 அவர்கள் எனது பரலோகச்சபையில் நின்றிருந்தால்,
பிறகு யூதாவின் ஜனங்களுக்கு என் செய்தியைச் சொல்லியிருப்பார்கள்.
அவர்கள் தீயசெயல் செய்யாமல் ஜனங்களைத் தடுத்திருப்பார்கள்.
அவர்கள் பாவம் செய்யாதபடி ஜனங்களைத் தடுத்திருப்பார்கள்.”
23 “நான் தேவன்! நான் எப்பொழுதும் அருகில் இருக்கிறேன்!”
இந்த வார்த்தை கர்த்தரிடத்திலிருந்து வருகிறது.
“நான் தூரத்தில் இல்லை.
24 சில மறைவிடங்களில் ஒருவன் என்னிடமிருந்து ஒளிய முயலலாம்.
ஆனால், அவனைப் பார்ப்பது எனக்கு எளிதாகும்.
ஏனென்றால், நான் பரலோகம் பூமி என்று எல்லா இடங்களிலும் இருக்கிறேன்!”
கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
25 “என் நாமத்தில் பொய்யைப் பிரசங்கம் செய்யும் தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள். அவர்கள், ‘எனக்கு ஒரு கனவு வந்தது. எனக்கு ஒரு கனவு வந்தது’ என்றார்கள். அவர்கள் இவற்றைச் சொல்வதை நான் கேட்டேன். 26 இது இன்னும் எவ்வளவு காலம் செல்லும்? அத்தீர்க்கதரிசிகள் பொய்களை நினைக்கின்றனர். பிறகு அப்பொய்களை ஜனங்களுக்குப் போதிக்கிறார்கள். 27 இத்தீர்க்கதரிசிகள் ஜனங்கள் என் நாமத்தை மறக்கச் செய்ய முயற்சி செய்துக்கொண்டிருக்கிறார்கள். இப்பொய்யான கனவுகளை அவர்கள் ஒருவருக்கொருவர் சொல்லி இதனைச் செய்கிறார்கள். அவர்களது முற்பிதாக்கள் என்னை மறந்தது போலவே, எனது ஜனங்கள் என்னை மறக்கும்படி அவர்கள் செய்ய முயல்கிறார்கள். அவர்களின் முற்பிதாக்கள் என்னை மறந்துவிட்டு பொய்யான பாகால் தெய்வத்தை தொழுதனர். 28 வைக்கோல் கோதுமையைப்போன்று ஆகாது. இது போலவே, அத்தீரிக்கதரிசிகளின் கனவுகள் எல்லாம் என்னிடமிருந்து வரும் செய்திகள் ஆகாது. ஒருவன் தனது கனவுகளைப்பற்றிச் சொல்ல விரும்பினால், அவன் சொல்லட்டும். ஆனால், எனது நற்செய்தியை கேட்கட்டும் நற்செய்தியைக் கேட்கிற மனிதன் எனது செய்தியை உண்மையுடன் கூறட்டும்.” 29 “எனது செய்தி அக்கினியைப் போன்றது இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. இது பாறையை நொறுக்கும் சம்மட்டியைப் போன்றது.”
30 “எனவே நான் கள்ள தீர்க்கதரிசிகளுக்கு எதிரானவர்.” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. “இத்தீர்க்கதரிசிகள் ஒருவரிடமிருந்து ஒருவர் என் வார்த்தைகளைத் திருடுகிறார்கள். 31 நான் பொய்யான தீர்க்கதரிசிகளுக்கு எதிரானவர்” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “அவர்கள் தம் சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அச்செய்தியை என்னிடமிருந்து வருவதாக நடிக்கின்றனர். 32 பொய்க் கனவுகளைப் பரப்பும் பொய்த் தீர்க்கதரிகளுக்கு நான் எதிரானாவர்.” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “அவர்கள் எனது ஜனங்களைப் பொய்யாலும், பொய் போதனைகளாலும் தவறாக வழிகாட்டுகின்றனர். ஜனங்களுக்குப் போதிக்க நான் இத்தீர்க்கதரிசிகளை அனுப்பவில்லை. எனக்காக எதையும் செய்யும்படி நான் அவர்களுக்குக் கட்டளை இடவில்லை. யூதாவின் ஜனங்களுக்கு அவர்களால் உதவி செய்யவே முடியாது” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.
கர்த்தரிடமிருந்து வரும் சோகச் செய்தி
33 “யூதாவின் ஜனங்களே, ஒரு தீர்க்கதரிசியோ, ஒரு ஆசாரியரோ உன்னிடம் ‘கர்த்தருடைய அறிக்கை என்ன என்று கேட்கும்போது’ நீ அவர்களுக்கு, ‘நீங்கள் கர்த்தருக்குப் பெரும் பாரமாக இருக்கிறீர்கள். நான் இப்பாரத்தைத் தூக்கிப் போடுவேன்’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது என்று சொல்.
34 “ஒரு தீர்க்கதரிசி அல்லது ஆசாரியன், அல்லது ஜனங்களில் ஒருவன் சொல்லலாம். ‘இது தான் கர்த்தருடைய அறிக்கை…’ அம்மனிதன் பொய் சொன்னான். அவனையும் அவனது குடும்பத்தையும் நான் தண்டிப்பேன். 35 இதைத்தான் ஒருவரிடம் ஒருவர் நீங்கள் கேட்கவேண்டும். ‘கர்த்தருடைய பதில் என்ன?’ அல்லது ‘கர்த்தர் என்ன பதில் சொன்னார்?’ 36 ‘கர்த்தருடைய அறிவிப்பு’ பெருஞ்சுமையானது என்று ஒருபோதும் மீண்டும் சொல்லமாட்டாய். ஏனென்றால், கர்த்தருடைய நற்செய்தி யாருக்கும் பெருஞ்சுமையாக இருக்கக்கூடாது. ஆனால் நீ எங்கள் தேவனுடைய வார்த்தையை மாற்றினாய். அவரே ஜீவனுள்ள தேவன். சர்வ வல்லமையுள்ள கர்த்தர்!
37 “நீ தேவனுடைய வார்த்தையைக் கற்றுக்கொள்ளவேண்டுமென்று விரும்பினால் ஒரு தீர்க்கதரிசியைக் கேள். ‘கர்த்தர் என்ன பதிலைக் கொடுத்தார்?’ அல்லது ‘கர்த்தர் என்ன சொன்னார்?’ 38 ஆனால் ‘கர்த்தரிடமிருந்து வந்த அறிக்கை (பெருஞ்சுமை) என்ன’ என்று சொல்ல வேண்டாம். நீங்கள் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினால் பிறகு, கர்த்தர் இவற்றை உனக்குச் சொல்வார், ‘எனது செய்தியைக் “கர்த்தரிடமிருந்து வந்த அறிவிப்பு” பாரமானது என்று சொல்ல வேண்டாம். இவ்வார்த்தைகளைச் சொல்லவேண்டாம் என்று நான் உனக்குச் சொன்னேன். 39 ஆனால், நீ எனது செய்தியை பெருஞ்சுமை என்று அழைத்தாய். எனவே, நான் உன்னைப் பெருஞ்சுமையைப் போன்று தூக்கித் தூர எறிவேன். உங்கள் முற்பிதாக்களுக்கு எருசலேம் நகரத்தைக் கொடுத்தேன். ஆனால், நான் உன்னையும் அந்நகரத்தையும் என்னை விட்டுத் தூர எறிவேன். 40 உன்னை முடிவற்ற அவமானத்திற்கு உள்ளாக்குவேன். உன் அவமானத்தை ஒருபோதும் நீ மறக்கமாட்டாய்.’”