தேவன் தமது பகைவர்களைத் தண்டிப்பார்
34
அனைத்து நாடுகளே, அருகில் வந்துகவனியுங்கள் ஜனங்கள் அனைவரும் நன்கு கவனிக்க வேண்டும். பூமியும், பூமியிலுள்ள அனைத்து ஜனங்களும் இவற்றைக் கவனிக்க வேண்டும். எல்லா நாடுகளின்மீதும், அவற்றிலுள்ள படைகளின் மீதும் கர்த்தர் கோபத்தோடு இருக்கிறார். அவர்கள் அனைவரையும் கர்த்தர் அழிப்பார். அவர்கள் அனைவரும் கொல்லப்படுவதற்கு அவர் காரணமாக இருப்பார். அவர்களின் உடல்கள் வெளியே எடுத்தெறியப்படும். உடல்களிலிருந்து நாற்றம் கிளம்பும், மலைகளில் இரத்தம் வடியும். வானங்கள் புத்தகச் சுருளைப்போலச் சுருட்டப்படும். நட்சத்திரங்கள் திராட்சைக் கொடியின் இலைகள் அல்லது அத்திமர இலைகள்போல உதிரும். வானத்திலுள்ள எல்லா நட்சத்திரங்களும் உருகிப்போகும். “எனது வாளானது வானில் இரத்தத்தால் மூடப்படும்போது இது நிகழும்” என்று கர்த்தர் கூறுகிறார்.
பார்! கர்த்தருடைய வாள் ஏதோமை வெட்டிப் போடுகிறது. அந்த ஜனங்களைக் கர்த்தர் குற்றவாளியாகத் தீர்ப்பளித்தார். அவர்கள் மரிக்கவேண்டும்.
கர்த்தருடைய வாள் ஆட்டுக் குட்டிகள் மற்றும் வெள்ளாடுகளின் இரத்தம் பூசப்பட்டு, செம்மறியாட்டு கொழுப்பினால் வழுவழுப்பாக்கப்பட்டதாயும் இருக்கிறது. ஏனென்றால், கர்த்தர் போஸ்றாவிலும் ஏதோமிலும் கொல்வதற்கு இதுதான் நேரம் என்று முடிவு செய்தார். எனவே, ஆட்டுக் குட்டிகள், கடாக்கள், பலமிக்க காளைகள் எல்லாம் கொல்லப்படும். அவற்றின் இரத்தத்தால் நாடு நிறைந்துவிடும். அதின் மண்ணானது கொழுப்பால் மூடப்படும்.
இவையனைத்தும் நிகழும். ஏனென்றால், கர்த்தர் தண்டனைக்கென்று ஒரு காலத்தைத் தேர்தெடுத்திருக்கிறார். கர்த்தர் ஒரு வருடத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர்கள் சீயோனில் தாங்கள் செய்த பாவங்களுக்கு விலை தரவேண்டும்.
ஏதோமின் ஆறுகள் சூடான தாரைப் போலாகும். ஏதோமின் பூமி எரிகிற கந்தகம் போன்று ஆகும். 10 இரவும் பகலும் நெருப்பு எரிந்துகொண்டிருக்கும். எவராலும் அதனை அணைக்க முடியாது. அதன் புகை ஏதோமிலிருந்து என்றென்றும் கிளம்பிக்கொண்டிருக்கும். அந்தப் பூமியானது சதாகாலமாக அழிக்கப்படும். மீண்டும் அந்த நாட்டின் வழியாக எந்த ஜனங்களாலும் பயணம் செய்யமுடியாது. 11 பறவைகளும் சிறு மிருகங்களும் அந்த நாட்டைச் சொந்தமாக்கும். ஆந்தைகளும் காக்கைகளும் அங்கே வாழும். “காலியான வனாந்திரம்” என்று அந்த நாடு அழைக்கப்படும்.
12 பிரபுக்களும் தலைவர்களும் போய்விடுவார்கள். அவர்களுக்கு ஆட்சி செய்ய அங்கே எதுவும் இருக்காது.
13 அங்குள்ள அழகான வீடுகளில் முட்செடிகளும் புதர்களும் வளரும். அந்த வீடுகளில் காட்டு நாய்களும், ஆந்தைகளும் வாழும். காட்டு மிருகங்கள் தம் வாழிடங்களை அங்கே அமைத்துக்கொள்ளும். அங்கு வளர்ந்துள்ள பெரிய புல்வெளிகளில் பெரிய பறவைகள் வாழும். 14 அங்கே காட்டுப் பூனைகள் ஓரிகளுடன் வாழும் காட்டு ஆடுகள் தம் நண்பர்களைக் கூப்பிடும். அங்கே சாக்குருவிகளும் ஓய்வெடுக்க இடம் தேடிக்கொள்ளும். 15 பாம்புகள் தங்கள் வீடுகளை அங்கே அமைத்துக்கொள்ளும். பாம்புகள் தங்கள் முட்டைகளை அங்கே இடும். அம்முட்டைகள் பொரித்து, சிறு பாம்புகள் இருட்டில் திரிந்துகொண்டிருக்கும். மரித்துப்போனவற்றைத் தின்னும் பறவைகள், பெண்கள் தம் நண்பர்களைப் பார்வையிடுவதுபோன்று சேர்ந்துகொள்ளும்.
16 கர்த்தருடைய புத்தகச்சுருளைப் பாருங்கள் அதில் எழுதப்பட்டிருப்பதை வாசியுங்கள். எதுவும் குறையாமல் இருக்கும். அந்த மிருகங்கள் சேர்ந்திருக்கும் என்று அந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. தேவன் அவற்றை ஒன்று சேர்ப்பதாகச் சொன்னார். எனவே தேவனுடைய ஆவி அவற்றை ஒன்று சேர்க்கும்.
17 அவர்களோடு என்ன செய்யவேண்டும் என்று தேவன் முடிவு செய்துவிட்டார். பிறகு அவர்களுக்காக தேவன் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்தார். தேவன் ஒரு கோடு வரைந்து, அவர்களின் நாட்டை அவர்களுக்குக் காட்டினார். எனவே என்றென்றைக்கும் அந்த நாட்டைச் சொந்தமாக்கிக்கொண்டு அவர்கள் ஆண்டாண்டு காலம் அங்கே வாழ்வார்கள்.