இஸ்ரவேல் தன்னைத்தானே அழித்திருக்கிறான்
13
“எப்பிராயீம் இஸ்ரவேலில் தன்னைத் தானே முக்கிமானவனாகச் செய்துக் கொண்டான். எப்பிராயீம் பேசினான். ஜனங்கள் பயந்து நடுங்கினார்கள். ஆனால் எப்பிராயீம் பாவம் செய்தான். பாகாலை தொழத் தொடங்கினான். இப்பொழுது இஸ்ரவேலர்கள் மேலும் மேலும் பாவம் செய்கிறார்கள். அவர்கள் தாங்களாகவே விக்கிரகங்களைச் செய்துக்கொள்கிறார்கள். வேலைக்காரர்கள் வெள்ளியால் அந்த அழகான சிலைகளைச் செய்கிறார்கள். பிறகு அவர்கள் தம் சிலைகளோடு அடிக்கடி பேசுகிறார்கள். அவர்கள் அந்தச் சிலைகளுக்குப் பலி கொடுக்கிறார்கள். அவர்கள் அந்தத் தங்கக் கன்றுகுட்டிச் சிலைகளை முத்தமிடுகிறார்கள். அதனால்தான் அந்த ஜனங்கள் விரைவில் மறைந் துவிடுகிறார்கள். அவர்கள் காலையில் காணும் மூடுபனியைப் போன்றும், விரைவில் மறையும் பனியைப் போன்றும் மறைவார்கள். இஸ்ரவேலர் காற்று வீசும்போது களத்திலிருந்து பறக்கிற பதரைப் போன்றும், ஒரு புகைக் கூண்டிலிருந்து எழும்பி மறைந்து போகும் புகையைப் போன்றும் இருப்பார்கள்.
“நீங்கள் எகிப்து தேசத்திலிருந்த நாள் முதலாக நான் உன் தேவனாகிய கர்த்தராக இருக்கிறேன். நீங்கள் என்னைத் தவிர வேறு தெய்வங்களை அறியவில்லை. நானே உங்களை இரட்சித்தவர். நான் உங்களை வானாந்தரத்திலேயே அறிவேன். நான் உங்களை வறண்ட நிலத்திலும் அறிவேன். நான் இஸ்ரவேலர்களுக்கு உணவு கொடுத்தேன். அவர்கள் அந்த உணவை உண்டார்கள். அவர்கள் தம் வயிறு நிறைந்து திருப்தி அடைந்தார்கள். அவர்கள் வீண் பெருமை அடைந்தார்கள். அவர்கள் என்னை மறந்தார்கள்!
“அதனால்தான் நான் அவர்களுக்கு ஒரு சிங்கத்தைப் போலிருப்பேன். நான் சாலையில் காத்திருக்கிற சிறுத்தையைப் போன்று இருப்பேன். நான் தன் குட்டிகளை இழந்த கரடியைப் போன்று அவர்களைத் தாக்குவேன். நான் அவர்களின் நெஞ்சைப் பிளப்பேன். நான் ஒரு சிங்கம் அல்லதுவேறொரு காட்டுமிருகம் தன் வேட்டையின் உணவைக் கிழித்துத் தின்பதுபோல் இருப்பேன்.”
தேவ கோபத்திலிருந்து இஸ்ரவேலை எவராலும் காப்பாற்ற முடியாது
“இஸ்ரவேலே, நான் உனக்கு உதவினேன். ஆனால் நீ எனக்கு எதிராகத் திரும்பினாய். எனவே, இப்போது நான் உண்னை அழிப்பேன். 10 உங்களது அரசன் எங்கே? அவன் உங்களது நகரங்கள் எதிலும் உங்களைக் காப்பாற்றமுடியாது. உங்களது நீதிபதிகள் எங்கே? நீ அவர்களுக்காக, ‘ஒரு அரசனையும் தலைவர்களையும் தாரும்’ என்று கேட்டாய். 11 நான் என் கோபத்திலே உங்களுக்கு ஒரு ராஜவைக் கொடுத்தேன். மிகவும் கோபமடைந்தபோது அவனை எடுத்துக்கொண்டேன்.
12 “எப்பிராயீம் தனது குற்றங்களை மறைக்க முயன்றான்.
அவன் தனது பாவங்கள் இரகசியமானவை என்று எண்ணினான்.
ஆனால் அவற்றுக்காகத் தண்டிக்கப்படுவான்.
13 அவனது தண்டனை ஒரு பெண் பிரசவ காலத்தில் உணரும் வலியைப் போன்றது.
அவன் அறிவுள்ள மகனாக இருக்கமாட்டான்.
அவனது பிறப்புக்கான காலம் வரும்.
அவன் பிழைக்கமாட்டான்.
14 “நான் அவர்களைக் கல்லறையிலிருந்து காப்பாற்றுவேன்.
நான் அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவேன்.
மரணமே, உனது நோய்கள் எங்கே?
கல்லறையே, உனது வல்லமை எங்கே?
நான் பழிவாங்கப் பார்க்கவில்லை.
15 இஸ்ரவேல் தனது சகோதரர்களுக்கிடையில் வளர்கிறான்.
ஆனால் வல்லமை மிக்க கிழக்குக் காற்று வரும்.
கர்த்தருடைய காற்று வனாந்தரத்திலிருந்து வீசும்.
பிறகு இஸ்ரவேலின் கிணறுகள் வறண்டுபோகும்.
அதன் நீரூற்றுகள் வற்றிப்போகும்.
இஸ்ரவேலின் விலைமதிப்புள்ள எல்லாவற்றையும்
காற்று அடித்துக்கொண்டு போகும்.
16 சமாரியா தண்டிக்கப்பட வேண்டும்.
ஏனென்றால், அவள் தன் தேவனுக்கு எதிராகத் திரும்பினாள்.
இஸ்ரவேலர்கள் வாள்களால் கொல்லப்படுவார்கள். அவர்களது பிள்ளைகள் துண்டுகளாகக் கிழிக்கப்படுவார்கள்.
அவர்களது கர்ப்பமுற்ற பெண்கள் கீறி கிழிக்கப்படுவார்கள்.”