உடன் கிறிஸ்தவர்களுக்கு உதவுதல்
9
தேவனுடைய மக்களுக்கு செய்ய வேண்டிய இந்த உதவி பற்றி உங்களுக்கு நான் அதிகமாக எழுத வேண்டிய தேவையில்லை. நீங்கள் உதவ விரும்புவதை நான் அறிவேன். மக்கதோனியா மக்களிடம் நான் இதைப்பற்றிப் பெருமையாகப் பேசி இருக்கிறேன். அகாயாவிலுள்ள நீங்கள் உதவி செய்ய ஓராண்டாகத் தயாராய் உள்ளீர்கள் என்பதைக் கூறி இருக்கிறேன். உங்களது உற்சாகம் இங்குள்ள பலரையும் தூண்டியது. ஆனால் நான் சகோதரர்களை உங்களிடம் அனுப்புகிறேன். இக்காரியத்தில் உங்களைப் பற்றி நாங்கள் சொன்ன பாராட்டுகள் பொய்யாகப் போகாமல் நான் சொன்னபடி நீங்கள் ஆயத்தமாக இருங்கள். நான் சில மக்கதோனியர்களோடு அங்கே வரும்போது நீங்கள் தயாராய் இல்லாமல் இருந்தீர்களெனில் அதனால் எனக்கு மிகவும் வெட்கம் உண்டாகும். ஏனென்றால் உங்களைப் பற்றி அவ்வளவு உறுதியாகக் கூறியிருக்கிறேன். (அது உங்களுக்கும் அவமானத்தைத் தரும்.) ஆகையால் நாங்கள் வருவதற்கு முன்னரே எங்கள் சகோதரர்களை உங்களிடம் அனுப்பி வைப்பது அவசியம் என்று நினைத்தேன். நீங்கள் ஏற்கெனவே சொன்னபடி விருப்பமுடன் பொருட்களைக் கொடுத்து உதவுங்கள். அச்சகோதரர்கள் அவற்றைச் சேர்த்துத் தயாராக வைத்திருப்பர்.
“கொஞ்சமாக விதைக்கிறவன் கொஞ்சமாகவே அறுவடை செய்வான். மிகுதியாக விதைக்கிறவனோ மிகுதியாகவே அறுவடை செய்வான்” என்பதை நினைவில் இருத்திக்கொள்ளுங்கள். ஒவ்வொருவனும், தன் இதயத்தில் எதைக் கொடுக்க வேண்டுமென்று தீர்மானிக்கிறானோ அதைக் கொடுப்பானாக. கொடுப்பதுப்பற்றி எவருக்காவது வருத்தம் ஏற்படுமானால் அவன் கொடுக்காமலேயே இருக்கட்டும். கட்டாயத்தின் பேரில் எவரும் கொடுக்கவேண்டாம். மகிழ்ச்சியோடு கொடுப்பவனையே தேவன் அதிகமாக நேசிக்கிறார். அவர்களுக்குத் தேவைக்கு மிகுதியான ஆசீர்வாதத்தை தேவனால் கொடுக்க முடியும். பிறகு உங்களிடமும் ஏராளமான செல்வம் சேரும். ஒவ்வொரு நற்செயலுக்கும் கொடுக்கப் போதுமான செல்வம் உங்களிடம் இருக்கும்.
“அவன் தாராளமாக ஏழைகளுக்குக் கொடுக்கிறான்.
அவனுடைய கருணை என்றென்றும் தொடர்ந்து நிற்கும்.” சங்கீதம் 112:9
என்று எழுதப்பட்டுள்ளது.
10 தேவனே விதைக்கிறவனுக்கு விதையைக் கொடுக்கிறார். உண்பதற்கு அவரே அப்பத்தையும் கொடுக்கிறார். அவர் ஆன்மாவிற்குரிய விதையைக் கொடுப்பார். அதனை வளர்க்கவும் செய்வார். உங்களது நீதியினிமித்தம் சிறந்த அறுவடையையும் பெருகச் செய்வார். 11 தாராளமாய்க் கொடுக்கும் அளவுக்கு எல்லா வகையிலும் தேவன் உங்களைச் செல்வந்தர் ஆக்குவார். நீங்கள் எங்கள் மூலமாகக் கொடுத்தால் மக்கள் தேவனுக்கு நன்றி சொல்வர்.
12 தேவைப்படும் தேவனுடைய மக்களுக்கு நீங்கள் உதவி செய்வது பெரும் சேவையாகும். இதற்கு இணையானது வேறில்லை. தேவனுக்கு அளவு கடந்த நன்றிகளை இது கொண்டு வரும். 13 நீங்கள் செய்யும் இச்சேவையானது உங்கள் விசுவாசத்திற்கான நல்ல சாட்சியாகும். இதற்காக மக்கள் தேவனைப் பாராட்டுவர். நீங்கள் விசுவாசிப்பதாக ஒத்துக்கொள்ளும் கிறிஸ்துவின் நற்செய்தியை நீங்கள் பின்பற்றுவதால் மக்கள் அவருக்கு நன்றி சொல்வார்கள். ஏனெனில் அவர்களின் தேவைகளிலும் ஒவ்வொருவரின் தேவைகளிலும் நீங்கள் தாராளமாகப் பங்கு கொள்கிறீர்கள். 14 அந்த மக்கள் தேவனிடம் ஜெபிக்கும்போது, அவர்கள் உங்களோடு இருக்கவே விரும்புவர். ஏனென்றால் தேவன் உங்களுக்கு மிகுதியாகக் கிருபை செய்திருக்கிறார். 15 தேவன் அருள்செய்த விளக்க இயலாத வியக்கத்தக்க கிருபைக்காக நன்றி செலுத்துவோமாக.