மக்கதோனியா, கிரீஸில் பவுல்
20
தொல்லை நீங்கியபோது பவுல் சீஷர்களைத் தன்னை வந்து பார்க்குமாறு அழைத்தான். அவன் அவர்களுக்கு ஆறுதல் மொழிகளைக் கூறி,பின் விடை பெற்றான். பவுல் மக்கதோனியா நாட்டிற்குத் தன் பயணத்தைத் துவக்கினான். மக்கதோனியாவிற்குச் சென்ற வழியில் பல இடங்களில் தங்கி சீஷர்களை பலப்படுத்துவதற்குப் பல காரியங்களை அவர்களுக்குக் கூறினான். பின் பவுல் கிரீசை அடைந்தான். அவன் அங்கு மூன்று மாதங்கள் தங்கினான். அவன் சிரியாவுக்குக் கடற்பயணம் செய்வதற்குத் தயாராகிக்கொண்டிருந்தான். ஆனால் சில யூதர்கள் அவனுக்கெதிராகத் திட்டம் வகுத்துக்கொண்டிருந்தனர். எனவே பவுல் மக்கதோனியா வழியாக சிரியாவுக்குத் திரும்பிப் போக முடிவு செய்தான். சில மனிதர்கள் அவனோடிருந்தனர். அவர்கள் பெரேயா நகரத்தைச் சேர்ந்த சோபத்தர், தெசலோனிக்கா நகரத்தின் அரிஸ்தர்க்கு மற்றும் செக்குந்து, தெர்பெ நகரின் காயு, தீமோத்தேயு, ஆசியாவின் இரண்டு மனிதர்களான தீகிக்குவும், துரோப்பீமும் ஆவர். பவுலுக்கு முன்னரே இம்மனிதர்கள் சென்றனர். துரோவா நகரில் அவர்கள் எங்களுக்காகக் காத்திருந்தனர். புளிப்பில்லாத அப்பத்தின் பண்டிகைக்குப் பிறகு நாங்கள் பிலிப்பி நகரத்திலிருந்து கடற் பயணமாகச் சென்றோம். ஐந்து நாட்களுக்குப் பிறகு துரோவாவில் இம்மனிதர்களை நாங்கள் சந்தித்தோம். அங்கு ஏழு நாட்கள் தங்கினோம்.
துரோவாவில் பவுல்
கர்த்தரின் திருவிருந்தை* உண்பதற்காக நாங்கள் அனைவரும் வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிறு அன்று கூடினோம். பவுல் கூட்டத்தில் பேசினான். மறுநாள் அங்கிருந்து செல்லத் திட்டமிட்டான். நள்ளிரவு வரைக்கும் பவுல் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தான். நாங்கள் எல்லோரும் மாடியிலுள்ள அறையில் கூடியிருந்தோம். அறையில் பல விளக்குகள் ஒளி வீசிக்கொண்டிருந்தன. ஐத்தீகு என்னப்பட்ட இளைஞன் ஜன்னலில் அமர்ந்திருந்தான். பவுல் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருந்தான். ஐத்தீகு மிக, மிக தூக்க கலக்கமுற்றான். கடைசியில் அவன் தூங்கி, ஜன்னலிலிருந்து விழுந்தான். மூன்றாம் மாடியிலிருந்து அவன் கீழே விழுந்தான். மக்கள் சென்று அவனைத் தூக்கியபோது அவன் இறந்து விட்டிருந்தான்.
10 பவுல் ஐத்தீகுவிடம் இறங்கிச் சென்றான். அவன் முழங்காலிட்டு ஐத்தீகுவை கட்டித் தழுவினான். பவுல் பிற விசுவாசிகளை நோக்கி, “கவலைப்படாதீர்கள். அவன் இப்போது உயிரோடிருக்கிறான்” என்றான். 11 பவுல் மீண்டும் மாடிக்குச் சென்றான். அவன் அவர்களோடு அப்பத்தைப் பிட்டு உண்டான். பவுல் அவர்களோடு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தான். அவன் பேசி முடித்தபோது அதிகாலைப் பொழுதாகியிருந்தது. பின் பவுல் புறப்பட்டுப் போனான். 12 மக்கள் இளைஞனை வீட்டிற்குள் எடுத்துச்சென்றனர். அவன் உயிரோடிருந்தான். மக்கள் மிகவும் ஆறுதல் அடைந்தனர்.
மிலேத்துவுக்குப் பயணம்
13 ஆசோ நகருக்கு நாங்கள் கடல்வழியாகப் பயணமானோம். நாங்கள் பவுலுக்கு முன்பாகவே முதலாவதாக அங்கு சென்றோம். ஆசோவில் பவுல் எங்களைச் சந்தித்து அங்குள்ள கப்பலில் எங்களோடு சேர்ந்துகொள்ளத் திட்டமிட்டான். பவுல் ஆசோவிற்கு நிலத்தின் வழியாகப் பயணம் செய்ய விரும்பியதால் இவ்வாறு செய்யும்படி எங்களுக்குக் கூறினான். 14 பின்னர் பவுலை நாங்கள் ஆசோவில் சந்தித்தோம். அங்கு அவன் எங்களோடு கப்பலின்மேல் வந்தான். நாங்கள் எல்லோரும் மித்திலேனே நகருக்குச் சென்றோம். 15 மறுநாள் நாங்கள் மித்திலேனேயிலிருந்து கடற்பயணமானோம். கீயுதீவின் அருகேயுள்ள ஓரிடத்திற்கு வந்தோம். மறுநாள் சாமோஸ் தீவிற்கு நாங்கள் கடல்வழியாகப் பயணமானோம். ஒரு நாள் கழித்து, மிலேத்து நகரத்திற்கு வந்தோம். 16 எபேசுவில் தங்கவேண்டாமென்று பவுல் ஏற்கெனவே முடிவெடுத்திருந்தான். ஆசியாவில் நீண்ட காலம் தங்க அவன் விரும்பவில்லை. முடிந்தால் பெந்தெகோஸ்து நாளில் எருசலேமில் இருக்க விரும்பியதால் அவன் அவசரப்பட்டுக்கொண்டிருந்தான்.
எபேசு மூப்பர்களுடன் பவுல்
17 மிலேத்துவிலிருந்து பவுல் ஒரு செய்தியை எபேசுவுக்கு அனுப்பினான். எபேசு சபையின் மூப்பரைத் தன்னிடம் வருமாறு அவன் அழைத்தான்.
18 மூப்பர்கள் அவனிடம் வந்தபொழுது பவுல் அவர்களை நோக்கி, “நான் ஆசியாவுக்கு வந்த முதல் நாளிலிருந்து என் வாழ்க்கையைக் குறித்து நீங்கள் அறிவீர்கள். நான் உங்களோடிருந்த காலம் முழுவதும் நான் வாழ்ந்த வகையையும் நீங்கள் அறிவீர்கள். 19 யூதர்கள் அடிக்கடி எனக்கு எதிராகக் காரியங்களைத் திட்டமிட்டனர். இது எனக்குத் துன்பங்களைத் தந்தது. நான் அடிக்கடி அழுதேன். ஆனால் மிகப் பணிவாக எப்போதும் தேவனுக்கு சேவை செய்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். 20 உங்களுக்கு மிகவும் சிறந்ததையே நான் எப்போதும் செய்தேன். இயேசுவைக் குறித்த நற்செய்தியை உங்களுக்கு வெளிப்படையாகக் கூறினேன். வீடுகளிலும் உங்களுக்குக் கற்பித்தேன். 21 தங்கள் இருதயங்களை மாற்றி, தேவனுக்கு நேராகத் திரும்பும்படி, யூதரும் கிரேக்கருமாகிய எல்லா மக்களுக்கும் நான் கூறினேன். நமது கர்த்தராகிய இயேசுவில் நம்பிக்கை வைக்குமாறு அவர்கள் எல்லோருக்கும் சொன்னேன்.
22 “ஆனால் இப்போது பரிசுத்த ஆவியானவருக்குக் கீழ்ப்படிந்து எருசலேமுக்கு நான் போக வேண்டும். எனக்கு அங்கு என்ன நேருமென்று எனக்குத் தெரியாது. 23 துன்பமும் சிறையும் எருசலேமில் எனக்காக காத்திருப்பதை பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு நகரிலும் கூறுவதை மட்டும் அறிவேன். 24 நான் எனது உயிரைப் பொருட்படுத்தவில்லை. நான் பந்தயத்தை முடிக்கிறேன் என்பதும் தேவனுடைய கிருபையைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்குச் சொல்லுமாறு கர்த்தராகிய இயேசு எனக்குக் கொடுத்த வேலையை முடிக்கிறேன் என்பதும் முக்கியமானவை.
25 “இப்போது நான் சொல்வதைக் கேளுங்கள். என்னை உங்களில் ஒருவரும் திரும்பவும் பார்க்கமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். தேவனுடைய இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை நான் உங்களோடிருந்த போதெல்லாம் உங்களுக்குக் கூறினேன். 26 எனவே நான் உறுதியாயிருக்கிற ஒன்றைக் குறித்து இன்று உங்களுக்குக் கூற முடியும். உங்களில் சிலர் இரட்சிக்கப்படாவிட்டால் தேவன் என்னைக் குற்றம் சாட்டமாட்டார். 27 நீங்கள் அறிந்துகொள்ளவேண்டுமென தேவன் விரும்பிய அனைத்தையும் உங்களுக்குக் கூறினேன். எதையும் விட்டு வைக்கவில்லை என்பதால் இதை நான் சொல்ல முடிகிறது. 28 உங்களுக்காகவும் தேவன் உங்களுக்குத் தந்த எல்லா மக்களுக்காகவும் எச்சரிக்கையாக இருங்கள். அவரது மந்தையைக் கவனிக்கும் வேலையை பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். தேவனின் சபைக்கு நீங்கள் மேய்ப்பர்களைப்போல் இருக்க வேண்டும். தேவன் தமது சொந்த இரத்தத்தால் வாங்கிய சபை இது. 29 நான் பிரிந்த பின் உங்கள் குழுவில் சில மனிதர்கள் வருவார்கள் என்பதை அறிவேன். அவர்கள் கொடிய ஓநாய்களைப் போல் இருப்பார்கள். அவர்கள் மந்தையை அழிக்க முயல்வர். 30 மேலும் உங்கள் சொந்தக் குழுவின் மனிதர்களும் மோசமான தலைவராக மாறுவர். அவர்கள் தவறான போதனைகளைப் போதிக்கத் தொடங்குவர். உண்மையை விட்டு விலகி இயேசுவின் சீஷர்கள் சிலரைத் தம்மைப் பின்பற்றுமாறு செய்வார்கள். 31 எனவே எச்சரிக்கையாக இருங்கள்! எப்போதும் இதை நினைவுகூருங்கள். நான் உங்களோடு மூன்று ஆண்டுகள் இருந்தேன். இக்காலத்தில் நான் உங்களை எச்சரிப்பதை நிறுத்தவில்லை. நான் இரவும் பகலும் உங்களுக்கு உபதேசித்தேன். நான் அடிக்கடி உங்களுக்காக அழுதேன்.
32 “நான் இப்போது உங்களை தேவனுக்கு நியமம் செய்கிறேன். உங்களை பலப்படுத்தக் கூடிய தேவனுடைய கிருபையைப் பற்றிய தேவனுடைய செய்தியைச் சார்ந்திருக்கிறேன். தேவன் தனது பரிசுத்த மக்கள் எல்லோருக்கும் கொடுக்கும் ஆசீர்வாதத்தை இந்தச் செய்தி உங்களுக்குக் கொடுக்கும். 33 நான் உங்களோடிருந்தபோது, பிறருடைய பணத்தையோ விலை உயர்ந்த ஆடைகளையோ விரும்பவில்லை. 34 எனது தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்கும், என்னோடிருந்த மக்களின் தேவைகளுக்காகவும் எனது கைகளைக் கொண்டே நான் எப்போதும் உழைத்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். 35 நான் செய்ததைப் போலவே நீங்களும் உழைத்து எளிய மக்களுக்கு உதவ வேண்டுமென எப்போதும் உங்களுக்குச் சுட்டிக் காட்டினேன். கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளை நினைவு கூருவதற்கு உங்களுக்குக் கற்பித்தேன். ‘நீங்கள் ஒன்றைப் பெறும் வேளையைக் காட்டிலும் பிறருக்குக் கொடுக்கும்போதே மகிழ்ச்சியாக இருங்கள்’ என்று இயேசு கூறினார்” என்றான்.
36 இவ்விஷயங்களைக் கூறி முடித்த பின்னர், பவுல் எல்லோருடனும் முழங்காலிட்டுப் பிரார்த்தனை செய்தான். 37-38 அங்கு அழுகின்ற பெரும் சத்தம் இருந்தது. பவுல் மீண்டும், அவர்கள் தன்னைப் பார்க்கமாட்டார்கள் என்று கூறியதால் அம்மனிதர்கள், மிகவும் வருத்தமுடனிருந்தார்கள். அவர்கள் பவுலைக் கட்டிக்கொண்டு, முத்தம் கொடுத்தனர். அவனை வழியனுப்புவதற்காக அவனோடு கப்பல் வரைக்கும் சென்றனர்.

* 20:7: கர்த்தரின் திருவிருந்து. இயேசு தன் சீஷர்களுக்குத் தன்னை நினைவுகொள்வதற்காகக் கொடுத்த உணவு. லூக்கா 22:14-20.
† 20:16: பெந்தெகோஸ்து கோதுமை அறுவடை நாளை யூதர்கள் விழாவாகக் கொண்டாடுவர்.